SELANGOR

பிளாஸ்டிக் பை மீதான கொள்கையை அடுத்தாண்டில் மறுஆய்வு செய்யச் சிலாங்கூர் திட்டம்

ஷா ஆலம், டிச 6- பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப்பை பயன்பாடு மீதான கொள்கையை அடுத்தாண்டில் மறுஆய்வு செய்ய சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளதாக சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹி லோய் சியான் கூறினார்.

பிளாஸ்டி பைகளுக்கு தற்போது 20 காசு கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும் அதன் பயன்பாடு தொடர்ந்து அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

பிளாஸ்டிக் பைகளுக்கு விதிக்கப்படும் கட்டணம் மூலம் கடந்த 2021ஆம் ஆண்டு 65 லட்சம் வெள்ளி வசூலானது. கடந்தாண்டில் அத்தொகை 85 லட்சம் வெள்ளியாக அதிகரித்தது என்று அவர் தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு மீதான கொள்கை அமலாக்கம் குறித்து புக்கிட் லஞ்சான் உறுப்பினர் எலிசபெத் வோங் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

மாநிலத்தில் குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காலத்தில் பிளாஸ்டிக் மற்றும் போலிஸ்ட்ரின் பைகளின் பயன்பாட்டிற்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மாநில அரசு சிரமத்தை எதிர்நோக்கியதையும் அவர் ஒப்புக் கொண்டார்.

அடுத்தாண்டில் இப்பொருள்கள் பயன்பாடு தொடர்பாக வணிகர்களுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளை மாநில அரசு கடுமையாக்கும் என அவர் தெரிவித்தார்.

நாங்கள் அவர்களுக்கு மூன்றாண்டு கால அவகாசம் வழங்கி விட்டோம். அடுத்தாண்டு முதல் அமலாக்க நடவடிக்கையை தொடர விருக்கிறோம். நிபந்தனைகளை மீறும் தரப்பினரின் வர்த்தக உரிமம் ரத்து செய்யப்படும் என்றார் அவர்.


Pengarang :