NATIONAL

எல்லைப் பகுதிகளில் 500 ரேலா உறுப்பினர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

புத்ராஜெயா, டிசம்பர் 15 – அடுத்த ஆண்டு முதல் நாட்டின் ஐந்து எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பைப் பராமரிக்கப் பொது நடவடிக்கைப் படைக்கு (பிஜிஏ) உதவுவதற்காக மலேசியத் தன்னார்வத் துறையிலிருந்து (ரேலா) சுமார் 500 உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் கூறினார்.

ஐந்து எல்லைப் பகுதிகள் சபா, சரவாக், சிலாங்கூர், கிளந்தான் மற்றும் பெர்லிஸ் ஆகிய இடங்களில் உள்ள நுழைவு மையப் பகுதிகளை உள்ளடக்கியதாக அவர் கூறினார்.

நவம்பர் 2020 முதல், 500 உறுப்பினர்களை உள்ளடக்கிய ‘ரோல் அவுட்’ அடுத்த ஆண்டு தொடங்கும் என்று சைபுதீன் இன்று ரேலா தலைமையகத்திற்கு அதிகாரப்பூர்வ வருகை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையில், கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி முதல் மொத்தம் 188,303 ரேலா அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் வெள்ள தற்காலிக தங்குமிடங்களில் (பிபிஎஸ்) பணிகளுக்காகவும், நான்கு மாநிலங்களில் வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் ரோந்துப் பணிகளுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளனர் என்றார்.

“இந்த மாதத்திற்கு (டிசம்பர்) மட்டும், வடகிழக்கு பருவமழை நிகழ்வைத் தொடர்ந்து, அவ்விரண்டு பணிகளுக்காக மொத்தம் 3,173 ரேலா உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று சைபுதீன் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :