NATIONAL

நாட்டில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 4.2 விழுக்காடு அதிகரிப்பு

கோலாலம்பூர், டிச 22- இம்மாதம் 11 முதல் 17ஆம் தேதி வரையிலான
50வது நோய்த் தொற்று வாரத்தில் நாட்டில் டிங்கி காய்ச்சல்
சம்பவங்களின் எண்ணிக்கை 4.2 விழுக்காடு அதிகரித்து 1,950ஆகப்
பதிவாகியுள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 1,871
சம்பவங்களாக இருந்தது.

ஐம்பதாவது நோய்த் தொற்று வாரத்தில் டிங்கி காய்ச்சல் தொடர்புடைய
ஐந்து மரணச் சம்பவங்கள் பதிவானதாகச் சுகாதாரத் துறை தலைமை
இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இவ்வாண்டில் இதுவரை பதிவான டிங்கி காய்ச்சல் சம்பவங்களின்
எண்ணிக்கை 62,060 ஆகும் எனக் கூறிய அவர், கடந்தாண்டின் இதே
காலக்கட்டத்தில் 25,161 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியிருந்ததாகக்
குறிப்பிட்டார்.

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு டிங்கி சம்பவங்களின்
எண்ணிக்கை 146.7 விழுக்காடு அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது. கடந்த
2021ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 19ஆக இருந்த டிங்கி
தொடர்புடைய மரணச் சம்பவங்களின் எண்ணிக்கை இவ்வாண்டில் 49ஆக
அதிகரித்துள்ளது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

மேலும், 49வது நோய்த் தொற்று வாரத்தில் 55 ஆக இருந்த டிங்கி பரவல்
அபாயம் அதிகம் உள்ள இடங்களின் எண்ணிக்கை 50 வாரத்தில் 58ஆக
உயர்வு கண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

அவற்றில் 32 இடங்கள் சிலாங்கூரிலும் 16 இடங்கள் சபாவிலும் ஆறு
இடங்கள் கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவிலும், நான்கு இடங்கள்
பினாங்கிலும் அடையாளம் காணப்பட்டன என்றார் அவர்.


Pengarang :