SELANGOR

சட்டவிரோதக் குப்பைக் கொட்டும் மையங்களுக்கு எதிரான நடவடிக்கையில் 126 லோரிகள் பறிமுதல்

ஷா ஆலம், டிச 23- இவ்வாண்டு ஜனவரி முதல் டிசம்பர் 19ஆம் தேதி
வரை சட்டவிரோதக் குப்பைக் கொட்டும் மையங்களுக்கு எதிராக காஜாங்
நகராண்மைக் கழகம் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 126 லோரிகள்
பறிமுதல் செய்யப்பட்டன.

சுற்றுச் சூழலுக்கு மாசு எற்படுத்திய காரணத்திற்காக நகராண்மைக்
கழகத்தின் 2007ஆம் ஆண்டு குப்பை சேகரிப்பு மற்றும் அழிப்பு துணைச்
சட்டத்தின் கீழ் அந்த லோரிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக நகராண்மைக்
கழகத் தலைவர் நஜ்முடின் ஜெமாய்ன் கூறினார்.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் சில பொறுப்பற்ற நபர்கள் குப்பைகளைக்
கொட்டும் நடவடிக்கையை மேற்கொண்டதைத் தொடர்ந்து நகராண்மைக்
கழகத்தின் சேவைத் துறையும் சுகாதாரத் துறையும் இந்த சோதனை
நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மாதத்தில் மட்டும் மூன்று லோரிகள் பறிமுதல் செய்யப்பட்டு
அபராதம் விதிக்கப்பட்டது. கம்போங் சிம்பாங் பாலாக், ஜாலான் குவாரி
சுங்கை லோங், டேசா புடிமான், புக்கிட் அம்பாங், கோலாலம் ஆயர்
பானாஸ், சுங்கை செராய் ஆகிய இடங்களில் இந்த சோதனை
மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.

இன்று நடைபெற்ற காஜாங் நகராண்மைக் கழகத்தின் மாதாந்திரக்
கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :