ANTARABANGSA

இந்தியாவின் “ரியாலிட்டி ஷோ“ நிகழ்ச்சியிலும் கேள்வியின் நாயகன் ஆனார் பிரதமர் அன்வார்

பெட்டாலிங் ஜெயா, டிச 27- இந்தியாவின் பிரசித்தி பெற்ற “ரியாலிட்டி
ஷோ“ நிகழ்ச்சி ஒன்றிலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கேள்வியின் நாயகன் ஆகியுள்ளார்.

இந்தியாவின் பிரபல திரை நட்சத்திரமான அமிதாப் பாச்சன் நடத்தும்
“உங்களில் யார் அடுத்த கோடீஸ்வரர்“ எனும் இந்தி கேள்வி பதில்
நிகழ்ச்சியில் பிரதமர் அன்வார் பற்றிய கேள்வி ஒன்றும் கேட்கப்பட்டது.

அந்நிகழ்ச்சியில் இடம் பெற்ற அன்வார் பற்றிய கேள்வியை உள்ளடக்கிய
45 விநாடி காணொளி நேற்று முதல் பரவலாகச் சமூக ஊடகங்களில்
பகிரப்பட்டு வருவதாகக் கோஸ்மோ பத்திரிகை இன்று செய்தி
வெளியிட்டுள்ளது.

அந்நிகழ்ச்சியில் எந்த நாடு 2022ஆம் ஆண்டில் அன்வார் இப்ராஹிமை
பிரதமராக தேர்ந்தெடுத்தது? என அமிதாப் பாச்சன் போட்டியின்
பங்கேற்பாளரிடம் கேள்வியெழுப்பியருந்தார்.

ஈராக், மலேசியா, பாஹ்ரின், இந்தோனேசியா ஆகிய நான்கு பதில்கள்
வழங்கப்பட்டன. சம்பந்தப்பட்ட பங்கேற்பாளரும் “மலேசியா“ என்ற
விடையைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் இந்த கேள்விக்கு சரியான பதிலை
அளித்து 640,000 ரூபாய் பரிசை வென்றார்.

இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்ற இந்த கேள்வி சமூக வலைத்தளவாசிகள்
மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. நமது நாட்டின் அரசியல்
நிலவரங்கள் அனைத்துலக கவனத்தை ஈர்த்துள்ளது குறித்து பலர்
பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

சமூக ஊடகங்கள் வாயிலாகச் செய்திகள் வெகு விரைவாக
வெளிநாடுகளுக்கு பரவுவதால் இப்போட்டியின் பங்கேற்பாளர் மிக எளிதாக
இந்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார் ஓஸ்மான் என்பவர்
பதிவிட்டுள்ளார்.

பிரதமர் அன்வார் பெயர் தொலைக்காட்சியில் தோன்றியது
பெருமையளிக்கும் வகையில் உள்ளது என சித்தி என்பவர் கூறியுள்ளார்.
இதன் பின்னர் வெளிநாட்டு கேள்வித் தாட்களில் இதுபோன்ற கேள்விகள்
அதிகம் வெளிவர வாய்ப்புள்ளது என எமினேன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடையின் மதிப்பு 8,000 அமெரிக்க டாலராகும் என அர்ஜூன்
என்பவர் தெரிவித்துள்ளார்.


Pengarang :