NATIONAL

இ.சி.ஆர்.எல். திட்டத்தின் 82 கிலோ மீட்டர் பகுதி வெள்ளத்தினால் பாதிப்பு

பாசீர் பூத்தே, டிச 27- அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகத்
திரங்கானு மாநிலத்தில் துஞ்சோங் முதல் செத்தியு வரையிலான கிழக்குக்
கரை இரயில் தடத்தின் (இ.சி.ஆர்.எல்.) 82 கிலோ மீட்டர் கட்டுமானப் பகுதி
பாதிக்கப்பட்டது.

காடுகளை அழிப்பது போன்ற பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்படும்
பகுதி மற்றும் தாழ்வானப் பகுதியில் இந்த வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதாக
மலேசிய ரெயில் லிங்க் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் செக்சன் 1
மற்றும் செக்சன் 2 கட்டுமானப் பிரிவு நிர்வாகி முகமது அஸ்மின
அப்துல்லா கூறினார்.

வெள்ளம் காரணமாக நிலச்சீராக்கப் பணிகள் பாதிக்கப்பட்டன. ஆகவே
அப்பகுதிகளில் பொறியியல் சார்ந்த பணிகளை மேற்கொள்ள
அனுமதிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

எனினும், அந்த இரயில் திட்டப் பணிகளுக்கு வெள்ளம் 100 விழுக்காடு
காரணம் அல்ல என்பதோடு இதனை தாங்கள் இடையூறாகவும்
கருதவில்லை என்று அவர் சொன்னார்.

வெள்ளத்தில் இழந்தவற்றை மீண்டும் பெற்று எங்கள் உற்பத்தி ஆற்றலை
மேலும் அதிகரிக்கவுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள புக்கிட் அபால் மாவட்ட கட்டுப்பாட்டு அலுவலகத்தில் 180
பேருக்கு வெள்ள நிவாரணப் பொருள்களை வழங்கியப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த வெள்ளப் பேரிடர் காரணமாக இரயில் தண்டவாளக் கட்டுமானப்
பணிகள் பாதிக்கப்படாது எனக் கூறிய அவர், பால நிர்மாணிப்புப் பணிகள்
தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார்.


Pengarang :