டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 3.5 விழுக்காடு அதிகரிப்பு- ஒருவர் மரணம்

கோலாலம்பூர், டிச 28- இம்மாதம் 18 முதல் 24ஆம் தேதி வரையிலான
51வது நோய்த் தொற்று வாரத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின்
எண்ணிக்கை 3.5 விழுக்காடு அதிகரித்து 2,018ஆகப் பதிவானது. அதற்கு
முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 1,950ஆக இருந்தது.

கடந்த 50வது நோய்த் தொற்று வாரத்தில் ஐந்தாக இருந்த டிங்கி
தொடர்புடைய மரணச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தில்
ஒன்றாக குறைந்ததாகச் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ
டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இவ்வாண்டில் இதுவரை பதிவான டிங்கி காய்ச்சல் சம்பவங்களின்
எண்ணிக்கை 64,078 ஆகும் எனக் கூறிய அவர், கடந்தாண்டின் இதே
காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை 25,794ஆக இருந்தது என்றார்.

இந்த எண்ணிக்கை 148.4 விழுக்காட்டு அதிகரிப்பைக் காட்டுகிறது. அதே
சமயம் கடந்தாண்டில் இதே காலக்கட்டத்தில் 19ஆக இருந்த டிங்கி
காய்ச்சலால் ஏற்பட்ட மரணச் சம்பவங்களின் எண்ணிக்கை இவ்வாண்டில்
50ஆக உயர்வு கண்டுள்ளது என்றார் அவர்.

கடந்த 50வது நோய்த் தொற்று வாரத்தில் 55 ஆக இருந்த நோய்ப் பரவல்
அபாயம் அதிகம் உள்ள இடங்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 58ஆக
உயர்ந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

டிங்கி அபாயம் அதிகம் உள்ள மாநிலங்களில் 32 இடங்களுடன் சிலாங்கூர்
முதலிடத்தில் உள்ள வேளையில் சபாவில் 16 இடங்களும் கோலாலம்பூர்
மற்றும் புத்ரா ஜெயாவில் ஆறு இடங்களும், பினாங்கில் நான்கு
இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றார்.


Pengarang :