NATIONAL

சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) விமானம் புறப்படுவதில் தாமதம் – பயணிகளுக்குச் சிறப்பு வவுச்சர்கள் இலவசம்

கோலாலம்பூர், டிச 28: கடந்த வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (KLIA) விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதற்கு  மலிண்டோ ஏர் என்று முன்பு  அழைக்கப்பட்ட பாதேக் ஏர் (Batik Air) விமான நிறுவனம் தாமதத்திற்கு  இன்று வருத்தம் தெரிவித்தது.

இது தொடர்பாகப் பாதேக் ஏர் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளையும் தொடர்பு கொண்டு அவர்களுக்குச் சிறப்பு வவுச்சர்களை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

“சம்பவத்திற்கு காரணம் ஆராயப்பட்டு வருகிறது, மேலும் எங்கள் செயல்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் சரி செய்வதற்கும், எங்கள் சேவையை மேம்படுத்துவதற்கான நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.

“பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் தாமதத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமதத்தின் போது உணவு வவுச்சர்கள் வழங்கப்பட்டன. ஆனால் தங்குமிடம் போன்ற பிற வசதிகளை வழங்க முடியவில்லை. மேலும் நள்ளிரவுக்குப் பிறகு நிலையத்தில் எந்த உணவு கடையும் திறந்திருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.

“நாங்கள் நீண்ட கால தாமதத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை, மேலும் இந்த நிலைமை சரிசெய்யப்பட்டு, நிலையத்தில் எங்கள் செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன என்பதை நாங்கள் பொதுமக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், பாதேக் ஏர் நிறுவனத்தை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நேற்றிரவு ட்விட்டர் பயனர் ஒருவருக்குப் பதிலளிக்கும் விதமாக லோக் இவ்வாறு கூறியுள்ளதாக அறியப்படுகிறது, தாமதம் காரணமாக ஏழு மணி நேரத்திற்கும் மேலாக விமான நிலையத்தில் சிக்கித் தவித்ததாக அந்த நபர் கூறினார்.

.-பெர்னாமா


Pengarang :