SELANGOR

நோயில் வாடும் ஐந்து மூத்தக் குடிமக்களுக்குத் தஞ்சோங் சிப்பாட் தொகுதி உதவி

ஷா ஆலம், டிச 28- தஞ்சோங் சிப்பாட் தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டிலான ஜியாரா காசே திட்டத்தின் கீழ் தஞ்சோங் சிப்பாட் மற்றும் கோல லங்காட் வட்டாரத்தைச் சேர்ந்த நோய்வாய்ப்பட்ட ஐந்து மூத்த குடிமக்களுக்கு உதவி வழங்கப்பட்டது.

கடந்த 26ஆம் தேதி தேதி நான்கு நோயாளிகளுக்கு உணவுக் கூடைகள், பெம்பர்ஸ் மற்றும் ரொக்கத் தொகையை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷாவின் சிறப்பு அதிகாரி ருக்கியா கோலாம் செரி வழங்கினார்.

கம்போங் சுங்கை லாங் தெங்கா, கம்போங் சுங்கை லாங் பாரு, தாமான் பெரிங்கினைச் சேர்ந்த அந்த மூத்த குடிமக்களை அவர்களின் இல்லம் தேடிச் சென்று இப்பொருட்களைத் தாங்கள் ஒப்படைத்தாக அவர்  சொன்னார்.

தஞ்சோங் சிப்பாட் தொகுதிக்கான சிலாங்கூர் சமூகச் சுகாதார தன்னார்வலர் (சுக்கா) குழு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 20ஆம் தேதி கம்போங் லாடாங் பத்துவில் உள்ள சொமேக் கார்த்தோ (வயது 70) என்ற நோயாளிக்கு மருத்துவமனை கட்டிலை தாங்கள் வழங்கியதாக அவர் மேலும் கூறினார்.

இந்த ஜியாரா காசே திட்டத்தை தாங்கள் வாராந்திர அடிப்படையில் மேற்கொண்டு வருவதாக ருக்கியா தெரிவித்தார்.

இதனிடையே, இன்சான் எனப்படும் சிலாங்கூர் அரசின் இலவச காப்புறுதி திட்டத்திற்கான பதிவு நடவடிக்கையை தமது தரப்பு கம்போங் இண்டா காப்பிக் கடை, கம்போங் குண்டாங் பாலாய் ராயா, லாங் பாரு பள்ளிவாசல் ஆகிய இடங்களில் மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

இந்த மூன்று இடங்களிலும் நேற்று வரை 200 பேர்  இன்சான் காப்புறுதி திட்டத்தில் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :