HEALTHNATIONAL

மைசெஜாத்ரா வழி வருகைக்கான முன்பதிவு முறை அனைத்து சுகாதார மையங்களுக்கும் விரிவாக்கம்

ஷா  ஆலம், டிச 28- வருகைக்கான முன்பதிவு முறையை நாட்டிலுள்ள அனைத்து அரசாங்க சுகாதார மையங்களுக்கும் சுகாதார அமைச்சு இன்று முதல் விரிவாக்கம் செய்துள்ளது.

இணையம் வாயிலான இந்த முன்பதிவு முறை சேவைத் திறனை அதிகரிப்பதோடு காத்திருக்கும் நேரத்தை குறைத்து நெரிசலையும் தவிர்க்க உதவுவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கூறினார்.

தேசிய சுகாதார பரிசோதனைத் திட்டம், பெக்கா பி40 மருத்துவச் சோதனை மற்றும் புகைப்பதை நிறுத்தும் சேவை ஆகிய திட்டங்களைத் தொடக்கமாகக் கொண்டு இந்த சேவை அனைத்து 673 சுகாதார கிளினிக்குகளில் கட்டங் கட்டமாக அமலுக்கு வருவதாக அவர் சொன்னார்.

பின்னர் இந்த சேவை வெளிநோயாளிகளுக்கான சிகிச்சை, வேலைக்கு முந்தைய சுகாதார பரிசோதனை, கல்விக்கு முந்தைய பரிசோதனை, திருமணத்திற்கு முந்தைய பரிசோதனை, குடும்ப திட்டமிடல் சேவை காயங்களுக்கான சிகிச்சை ஆகியவற்றும் விரிவுபடுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த சேவையின் வழி நோயாளிகள் தங்களின் நேர வசதிக்கேற்ப சுகாதார மையங்களுக்கு  சிகிச்சைக்கு செல்ல முடியும் என்பதோடு சம்பந்தப்பட்ட சுகாதார மையங்களைத் தொடர்பு கொள்ளாமலே வருகைக்கான நேரத்தை மாற்றிக் கொள்ள இயலும் என அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

அதோடு மட்டுமின்றி சுகாதார மையத்திற்கு வர வேண்டிய தேதி மற்றும் நேர குறித்த நினைவூட்டலை தானியங்கி முறையில் வழங்கும் வசதியையும் இந்த முறை கொண்டிருக்கும் என்றார் அவர்.

ஆபத்து, அவசர வேளை, காய்ச்சல், தொற்று நோய் போன்றவற்றுக்கு முன்பதிவு இன்றி பொது மக்கள் நேரடியாக சுகாதார மையங்களுக்குச் செல்லலாம் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :