NATIONAL

காலத்துக்கு ஒவ்வாத ஊடகச் சட்டங்கள் மறுஆய்வு செய்யப் படவேண்டும்- ஜோஹான் ஜாபர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயா டிச 31- ஊடகத் துறை தொடர்பான பழைய மற்றும் காலத்துக்கு ஒவ்வாத சட்டங்கள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு ஊடகத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக இந்த சட்ட மறுஆய்வு தேவைப்படுவதாக நாட்டின் மூத்த தேசியப் பத்திரிகையாளர் ஜோஹான் ஜாபர் கூறினார்.

உதாரணத்திற்கு 1984ஆம் ஆண்டு அச்சு இயந்திர மற்றும் பதிப்புரிமை சட்டத்தை சுட்டிக்காட்டிய அவர், நடப்புச் சூழலில் அச்சட்டம் பயன்படுத்தப்படுவதற்கு அவசியமாற்றதாக ஆகிவிட்டது என்றார்.

இதுதவிர, தற்போது செய்திகளை வெளியிடுவதற்கு சமூக ஊடகங்கள் அதிக அளவில் பயன்படுத்த படுத்தப்படுகின்றன, இத்தகைய சமூக ஊடகங்கள் உடனுக்குடன் செய்திகளை வெளியிடும் வேளையில் தேசிய நிலையிலான ஊடகங்கள் செய்திகளை தணிக்கை செய்வதற்கும் அதனை வெளியிடுவதற்கும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார்.

இதனைக் கருத்தில் கொண்டு ஊடகங்களைப் பாதுகாப்பதற்கும் ஊடகங்களுக்கு சுதந்திரம் வழங்குவதற்கு பிரத்தியேகச் சட்டங்கள் வரையப்படுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

இத்தகைய பழைய சட்டங்கள் நிறைய உள்ளன, அவை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் அல்லது அகற்றப்பட வேண்டும் என நேற்று இங்கு “அப்பாகாபார் டிவி“ எனும் இணைய செய்தி ஊடகத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.

அரசியல் கட்சி மற்றும் தினசரி பத்திரிகைகளுக்கான அச்சக மற்றும் பதிப்புரிமையை வழங்குவது உள்ளிட்ட நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் 1984ஆம் அச்சக மற்றும் பதிப்புரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டது.

இதனிடையே, இந்நிகழ்வில் உரையாற்றிய மலேசிய பத்திரிகையாளர் கழகத்தின் (எம்.பி.ஐ.) தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ டாக்டர் சாமில் வாரியா, இந்நாட்டில் செயல்படும் கூகுள், யாகூ போன்ற அனைத்துலக தொழில்நுட்ப பெரு நிறுவனங்களுக்கு வரி விதிக்கப்பட வேண்டும் என ஆலோசனை கூறினார்.

அந்த பெரு நிறுவனங்கள் உள்நாட்டு ஊடகங்களின் செய்திகள் பயன்படுத்திக் கொள்வதை  சுட்டிக்காட்டிய அவர், அந்த நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரியை உள்நாட்டு ஊடகங்களுக்கு பகிர்ந்தளிக்கலாம் என்றார்.


Pengarang :