SELANGOR

காஜாங் நகராண்மை உறுப்பினர்களாக நான்கு புதுமுகங்கள் உள்பட 24 பேர் நியமனம்

காஜாங், ஜன 4- காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்களாக நான்கு புது
முகங்கள் உள்பட 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள்
அனைவரும் நேற்று நகராண்மைக் கழகத் தலைவர் நஜ்முடின் ஜெயாய்ன்
முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

புதிதாக நியமனம் பெற்ற அனைத்து உறுப்பினர்களும் இவ்வாண்டு ஜனவரி
முதல் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரை இப்பதவியை வகிப்பர்
என்று நஜ்முடின் கூறினார்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நகராண்மைக் கழக
உறுப்பினர்களும் தங்களின் கடமைகளைச் செவ்வனே ஆற்றுவர் எனத்
தாம் எதிர்பார்ப்பதாக அவர் பதவியேற்புச் சடங்கில் ஆற்றிய உரையில்
குறிப்பிட்டார்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நிறைய கற்றுக் கொள்ள
வேண்டும் என்பதோடு நகராண்மைக் கழக உறுப்பினருக்கான பொறுப்புகள்
குறித்து ஆழமாக அறிந்திருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

ஊராட்சி மன்ற நிலையிலான அதிகாரத் தரப்பினர் என்ற முறையில் நாம்
புதியவர்களை வரவேற்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர்
கூறினார்.

இந்த 2023ஆம் ஆண்டு தவணைக்கான நகராண்மைக் கழக
உறுப்பினர்களின் பதவியேற்புச் சடங்கு அனைத்து 12 ஊராட்சி
மன்றங்களிலும் தற்போது நடைபெற்று வருகிறது.

இவ்வாண்டிற்கான நியமனத்தில் மொத்தம் 272 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் அண்மையில்
கூறியிருந்தார்.


Pengarang :