SELANGOR

ரொக்கமில்லாப் பரிவர்த்தனையை அமல்படுத்தும் வணிகர்களுக்குச் சிறப்புச் சலுகை- எம்.பி.எஸ் அறிவிப்பு

கோம்பாக், ஜன 4- தங்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ரொக்கமில்லாப்
பரிவர்த்தனையை அமல்படுத்தும் வணிகர்களுக்குச் செலாயாங்
நகராண்மைக் கழகம் சிறப்புச் சலுகைகளை வழங்க முன்வந்துள்ளது.

இலக்கவியல் துறையின் வளர்ச்சிக்கேற்ப வர்த்தக நடவடிக்கைகளில்
ரொக்கமில்லாப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில்
இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நகராண்மைக் கழகத் தலைவர்
டத்தோ முகமது யாஷிட் சைய்ரி கூறினார்.

இது குறித்து நாங்கள் விவாதித்துள்ளதோடு விரைவில் அதனை
நடைமுறைப்படுத்துவோம். வணிகர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் அந்த
சிறப்புச் சலுகை ரொக்கத் தொகையாக வழங்கப்படும் என அவர்
சொன்னார்.

முதல் கட்டமாக இந்த முன்னோடித் திட்டத்திற்கு பண்டார் பாரு
செலாயாங்கை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம் என்று இங்குள்ள
நகராண்மைக் கழகத் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நகராண்மைக்
கழக உறுப்பினர்கள் பதவியேற்புச் சடங்கிற்குப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

சமையலில் ஆர்வமுள்ளவர்கள் சொந்தமாக உணவு வியாபாரத்தைத்
தொடங்குவதற்கு ஏதுவாக அவர்களுக்குச் சமையல் பயிற்சிகளை
வழங்குவது தொடர்பில் செலாயாங் சமூகக் கல்லுரியுடன் தாங்கள்
ஒத்துழைப்பை நல்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :