யானிஸ் அறவாரியம் வழி மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி- மாநில அரசு வெ.40 லட்சம் ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜன 4- யானிஸ் எனப்படும் யாயாசான் இன்சான்
இஸ்திமேவா சிலாங்கூர் அறவாரியத்தின் வாயிலாக மாற்றுத்
திறனாளிகளுக்கான முன்னெடுப்புகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைளை
விரிவுபடுத்த மாநில அரசு 40 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

மாற்றுத் திறனாளிகளின் நலன் மேலும் ஆக்ககரமான முறையில்
பாதுகாக்கப்படுவதற்கு ஏதுவாக அத்தரப்பினரை மேம்படுத்தும்
நடவடிக்கைகளை யானிஸ் அறவாரியம் அனைத்து நிலைகளிலும்
மேற்கொள்ளும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு முறை மட்டும் நிதியுதவி வழங்குவது
போன்ற சமூக நலத் திட்டங்களை அமல்படுத்துவதில் மாநில அரசு
ஆர்வம் காட்டவில்லை.

மாறாக, விரிவான மற்றும் தீவிரமான முறையில் அத்தரப்பினருக்கு
ஆக்கத் திறனளிப்பதில் கவனம் செலுத்த நாங்கள் விரும்புகிறோம்.
மாற்றுத் திறனாளிகளுக்கு நட்புறவான மாநிலம் என்ற கொள்கைக்கேற்ப
இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூரை சுபிட்சம் நிறைந்த மாநிலமாக உருவாக்குவதில் சமுதாயம்
முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று அவர் தனது பேஸ்புக்
பதிவின் வாயிலாக கேட்டுக் கொண்டார்.

மாநிலத்திலுள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவும்
வகையில் யானிஸ் அறவாரியம் எம்.பி.ஐ.எனப்படும் சிலாங்கூர் மந்திரி
புசார் கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படும் என்று 2023ஆம் ஆண்டிற்கான
வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அமிருடின்
கூறியிருந்தார்.


Pengarang :