NATIONAL

ஜி.எஸ்.டி. குறித்து முடிவெடுக்கவில்லை- புதிய வரிகள் இன்றி வருமானத்தைப் பெருக்க அரசு திட்டம்

ஷா ஆலம், ஜன 11- ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டது முதல் பொருள் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) மீண்டும் அமல்படுத்துவது தொடர்பில் எந்தவொரு முடிவோ விவாதமோ நடத்தப்படவில்லை என்று துணை நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் கூறினார்.

ஆகவே, நடப்பு நடைமுறையை அரசாங்கம் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் என்று அவர் சொன்னார்.

ஜி.எஸ்.டி. அமலாக்கம் குறித்து இவ்வளவுதான் என்னால் தெரிவிக்க முடியும். அவ் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் விவாதிக்கவோ முடிவெடுக்கவோ இல்லை என்றார் அவர்.

இன்று இங்கு மூன்றாவது தேசிய கணக்காய்வாளர் மாநாட்டைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

எனினும், ஜி.எஸ்.டி. அமலாக்கத்தை சிறந்த நடவடிக்கை என வர்ணித்த அவர், உலகிலுள்ள 83 விழுக்காட்டு நாடுகள் இந்த வரி விதிப்பு முறையை அமல் படுத்துகின்றன என்றார்.

புதிதாக எந்த வரியையும் விதிக்காமல் வருமானத்தைப் பெருக்குவதற்கு வழி வகைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்று அவர் மேலும் சொன்னார்.

அதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு, பொருட்களை பதுக்குவதன் மூலம் ஏற்படும் இழப்பை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கிடைக்காது போகும் சிகரெட்டுகளுக்கான வரி மட்டும் 500 கோடி வெள்ளியை எட்டும் என சிலர் மதிப்பிடுகின்றனர் என்றார் அவர்.

சிகரெட்டுகளுக்கான விரி ஏய்ப்பு அல்லது பதுக்கலை தடுத்தால் புதிய வரிகள் இன்றி அரசாங்கம் 300 முதல் 500 கோடி வெள்ளி வரை உபரி வருமானமாகப் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :