NATIONAL

சிலாங்கூர் மாநிலத் தேர்தல்- பாரிசான்-பக்கத்தான் ஒத்துழைப்பு குறித்து இம்மாத இறுதியில் முடிவு

ஷா ஆலம், ஜன 11- விரைவில் நடைபெற இருக்கும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கும் தேசிய முன்னணிக்கும் (பாரிசான் நேஷனல்) இடையிலான ஒத்துழைப்பு குறித்து கூடிய பட்சம் இம்மாத இறுதிக்குள் முடிவெடுக்கப்படும்.

இவ்வாரம் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் அதன் தொடர்பில் தாம் அறிவிப்பு வெளியிட உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவ்விவகாரம்  இன்று மாநில ஆட்சிக்குழுவினர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். பேச்சுவார்த்தை மிகவும் ஆரோக்கியமான முறையில் உள்ளது. கூட்டரசு அரசாங்கத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இது அமைந்துள்ளது என அவர் சொன்னார்.

எத்தகைய ஒத்துழைப்பை நல்குவது என்பது குறித்து கூடிய பட்சம் இம்மாத இறுதிக்குள் முடிவெடுத்து விடுவோம். வரும் பிப்ரவரி மாதத்தில் மாநிலத் தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கி விடுவோம் என அவர் குறிப்பிட்டார்.

இன்று இங்குள்ள ஜூப்ளி பேராக் மண்டபத்தில் மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த முன்னெடுப்புக்கு அடிப்படையில் எந்த எதிர்ப்பும் வராது என நான் கருதுகிறேன். இருப்பினும் அதற்கான செயல்முறை குறித்து நாம் ஆராய வேண்டியுள்ளது. இதன் தொடர்பில் நான் பாரிசான் உறுப்பினர்களை அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்துள்ளேன் என்றார் அவர்.

தேர்தல் ஒத்துழைப்பு தொடர்பில் பாரிசானுடன் பேச்சு நடத்துவதற்கான ஆணையை தாம் பி.கே.ஆர். கட்சியிடமிருந்து பெற்றுள்ளதாக கூறிய அவர், பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சிகளுடன் இதன் தொடர்பில் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.


Pengarang :