SELANGOR

களைகட்டுகிறது பொங்கல் விழா- முன்னேற்பாடுகளில் பொதுமக்கள் தீவிரம்

ஷா ஆலம், ஜன 13- தமிழர்களின் பண்பாட்டு விழாவாகவும் உழவர்
திருநாளாகவும் விளங்கும் தைப் பொங்கல் வரும் 15ஆம் தேதி ஞாயிற்றுக்
கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு பொது
மக்கள் அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டத்
தொடங்கியுள்ளனர்.

பொங்கலுக்குத் தேவையான புது மண்பானை, அரசி, சீனி, கரும்பு, இஞ்சி
மஞ்சள், தோரணம் போன்ற பொருள்களை வாங்குவதில் பலர்
மும்முரமாக ஈடுபட்டு வருவதை காண முடிகிறது.

குறிப்பாக, சிலாங்கூரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் கிள்ளான், காப்பார்,
கோல சிலாங்கூர், ரவாங் காஜாங், பந்திங், சிப்பாங், ஷா ஆலமின் தாமான்
ஸ்ரீ மூடா போன்ற பகுதிகளில் உள்ள கடைத் தெருக்களில் பொங்கல்
விற்பனை இப்போதே களைகட்டத் தொடங்கி விட்டது.

இவ்வாண்டு பொங்கல் தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதால்
அன்றைய விடுமுறை தினத்தைப் பயன்படுத்தி இந்த விழாவை மேலும்
சிறப்புடன் கொண்டாட பலர் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்த பொங்கல் விழா நான்கு நாட்களுக்குத் தொடர்ச்சியாக
கொண்டாடப்படும். நாளை சனிக்கிழமை போகி பண்டிகையும் ஞாயிறன்று
தைப்பொங்கலும் கொண்டாடப்படும் வேளையில் திங்கள்கிழமை மாட்டுப்
பொங்கலும் செவ்வாய்க்கிழமை காணும் பொங்கலும் அனுசரிக்கப்படும்.


Pengarang :