NATIONAL

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 350 தொலைத் தொடர்பு கோபுரங்கள் சீரமைப்பு

தும்பாட், ஜன 13- கடந்த 2014ஆம் ஆண்டு முதல் வெள்ளம் காரணமாக
பாதிக்கப்பட்ட 350 தொலைத் தொடர்பு கோபுரங்களை தொடர்பு மற்றும்
இலக்கவியல் அமைச்சு மலேசிய தொடர்பு மற்றும் பல்லுடக
ஆணையத்தின் வாயிலாக சீரமைத்துள்ளது.

கிழக்கு கரை மாநிலங்களில் குறிப்பாக கிளந்தானில் வெள்ளத்தில்
பாதிக்கப்பட்ட 127 தொலைத் தொடர்பு கோபுரங்களும் இதில் அடங்கும்
என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபஹாமி
ஃபாட்சில் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள தொலைத் தொடர்பு கோபுரங்கள் தொடர்பான
பட்டியல் எங்களிடம் உள்ளது. இதன் தொடர்பான துல்லியமான
தகவல்களை பின்னர் வழங்குவோம். கிளந்தான் மாநிலத்தில் மட்டும்
சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அப்பணிகளை
விரைவுபடுத்தும்படியும் நாங்கள் பணித்துள்ளோம் என்றார் அவர்.

வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் தொலைத் தொடர்பு சேவையில் பாதிப்பு
ஏற்படாமலிருப்பதை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை
எடுக்கப்படுகிறது. மக்களுக்கு முழுமையான பயன் கிடைப்பதை நான்
உறுதி செய்வேன் என்று அவர் தெரிவித்தார்.

கடந்தாண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ
டாலாம் ரூவில் உள்ள தகவல் இலாகா பணியாளரின் குடியிருப்புக்கு
வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.


Pengarang :