SELANGOR

சுங்கை துவா தொகுதியில் 300,000 வெள்ளி செலவில் மக்கள் நலத் திட்டங்கள்- அமிருடின் தகவல்

கோம்பாக், ஜன 16- சுங்கை துவா தொகுதியிலுள்ள பல்வேறு
தரப்பினருக்கு உதவுவதற்காக மாநிலச் சட்டமன்ற சேவை அலுவலகம்
மூலம் 300,000 வெள்ளி வரை செலவிடப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம், சமூகவியல் நடவடிக்கைகள் மற்றும் குறிப்பிட்ட சில
நிறுவனங்களின் மேற்பார்வையிலான சிறு திட்டங்கள் ஆகியவற்றை
இலக்காகக் கொண்டு இத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாகத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பள்ளி செல்லும் பிள்ளைகள் மற்றும் நோயாளிகளுக்கு உதவிகள்
வழங்கியதோடு சிறு வணிகர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகளைப்
பொறுத்துவது, குழாய்களைப் பழுதுபார்ப்பது போன்ற சிறு திட்டங்களை
மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கும் உதவி புரிந்துள்ளோம் என்று அவர்
தெரிவித்தார்.

இந்த திட்டங்களுக்குச் செலவிடப்பட்ட தொகையின் மதிப்பு சுமார் 40,000
வெள்ளியாகும். சவ வாகனம் வாங்குவதற்குச் செலவிடப்பட்ட தொகையைச்
சேர்த்தால் இதன் மதிப்பு 200,000 முதல் 300,000 வெள்ளியை எட்டும்
என்றார் அவர்.

நேற்று இங்குள்ள பத்து கேவ்ஸ் பொது மண்டபத்தில் நலத் திட்ட
உதவிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக்
கூறினார்.


Pengarang :