SELANGOR

சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டிலான சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பில் 10,000 பேர் கலந்து கொள்வர்

ஷா ஆலம், ஜன 16- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான
சீனப்புத்தாண்டு பொது உபசரிப்பு இங்குள்ள டத்தாரான்
கெமெர்டேக்காஹான் சதுக்கத்தில் வரும் ஜனவரி 28ஆம் தேதி
நடைபெறவுள்ளது.

மாலை 3.30 மணி தொடங்கி இரவு 10.30 மணி வரை நடைபெறும் இந்த
பொது உபசரிப்பில் பத்தாயிரம் பேர் வரை கலந்து கொள்வர் என
எதிர்பார்க்கப்படுவதாக தொழிலியல் மற்றும் வர்த்தகத் துறைக்கான மாநில
ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

இந்த பொது உபசரிப்பில் சிங்க நடனம், பாரம்பரிய ஒபேரா நிகழ்வு, சீன
எழுத்தோவியம் வரையும் போட்டி, வாயாங் கூலிட் எனப்படும் தோல்
பாவை படைப்பு ஆகியவற்றோடு விற்பனை அங்காடிக் கடைகளும்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“பூமத்திய ரேகைக்கு மலர்ப் பருவம் திரும்பி விட்டது“ எனும்
கருப்பொருளிலான இந்த உபசரிப்பு நிகழ்வில் 120 கலைஞர்கள்
பங்கேற்கும் பாரம்பரிய கலை நிகழ்ச்சியும் நடத்தப்படும் என்றார் அவர்.

இந்த பொது உபசரிப்பு நிகழ்வுக்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான்
ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ், தெங்கு பெர்மைசூரி நோராஷிகின்
மற்றும் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா ஆகியோர் சிறப்பு வருகை புரிவர்
என்றும் அவர் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாகக் கடந்த மூன்று ஆண்டுகளாக
நடத்தப்படாமலிருந்த இந்த பொது உபசரிப்பு இம்முறை வெகு சிறப்பான
முறையில் கொண்டாடப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :