NATIONAL

டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 13.6 விழுக்காடு அதிகரிப்பு- ஒருவர் மரணம்

புத்ரா ஜெயா, ஜன 17- இம்மாதம் 8 முதல் 14 வரையிலான இவ்வாண்டின்
இரண்டாவது நோய்த் தொற்று வாரத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின்
எண்ணிக்கை 301 சம்பவங்கள் அல்லது 13.6 விழுக்காடு அதிகரித்து 2,520
ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரம் இந்த எண்ணிக்கை 2,219
சம்பவங்களாக இருந்தது.

இரண்டாவது நோய்த் தொற்று வாரத்தில் டிங்கி காய்ச்சல் தொடர்புடைய
ஒரு மரணச் சம்பவம் பதிவானதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர்
டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இவ்வாண்டின் இரண்டாவது நோய்த் தொற்று வாரம் வரையிலான
காலக்கட்டத்தில் பதிவான மொத்த டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை
4,739 ஆகும் எனக் கூறிய அவர், கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில்
இந்த எண்ணிக்கை 1,429 ஆக இருந்தது என்றார்.

இந்த எண்ணிக்கையானது 231.6 விழுக்காட்டு உயர்வுக் காட்டுகிறது.
கடந்தாண்டின் முதல் இரண்டு வாரங்களில் டிங்கி தொடர்புடைய இரு
மரணச் சம்பவங்கள் பதிவான வேளையில் கடந்தாண்டின் இதே
காலக்கட்டத்தில் மரணச் சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றார்
அவர்.

இவ்வாண்டின் முதலாவது நோய்த் தொற்று வாரத்தில் 67ஆக இருநத
நோய்த் தொற்று பரவல் அபாயம் உள்ள இடங்களின் எண்ணிக்கை
இரண்டாவது வாரத்தில் 69ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் 40 இடங்கள்
சிலாங்கூரில் அடையாளம் காணப்பட்ட வேளையில் சபாவில் 15
இடங்களும் பினாங்கில் 6 இடங்களும் கூட்டரசு பிரதேசத்தில் 5
இடங்களும் பேராக்கில் ஒரு இடமும் அடையாளம் காணப்பட்டன என்று
அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :