NATIONAL

ஊழலை ஒழித்தால் 1,000 கோடி வெள்ளியைக் காப்பாற்ற முடியும்- பிரதமர் கூறுகிறார்

புத்ராஜெயா, ஜன 17- அனைத்து நிலைகளிலும் ஊழலைத் தடுக்கும்
பட்சத்தில் மலேசிய அரசின் கொள்முதல் முறையில் ஏற்படும் 1,000 கோடி
வெள்ளி வரையிலான நிதிக் கசிவைக் காப்பாற்ற முடியும் என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அரசியல் மற்றும் குறிப்பிட்ட சில தரப்பினரின் தலையீடின்றி
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏதுவாக பழைய பாணியை
மாற்றியமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் இதனை அமல்படுத்த
முடியும் என்று அவர் சொன்னார்.

நான் நிதியமைச்சுக்குச் சென்று இரண்டு மாதங்கள்கூட ஆகவில்லை.
அதற்குள் சில தரப்பினருக்கும் முக்கியப் புள்ளிகளுக்கும் 300 கோடி முதல்
400 கோடி வெள்ளி வரையிலான நிதிக் கசிவதை கண்டறிந்துள்ளேன்.

கொள்முதல் முறையில் தொடர்ந்து நடைபெறும் கசிவு காரணமாக
ஏற்படும் 1,000 கோடி வெள்ளி வரையிலான இழப்பை நாம் காப்பாற்ற
முடியும் என்று இன்று இங்கு நடைபெற்ற 2023ஆம் ஆண்டு ‘வரவு
செலவுத் திட்ட விவாதத்தின் போது அவர் குறிப்பிட்டார்.

வெள்ளம், ஆயுதங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் கொள்முதல் பணியை
தகுதி உள்ளவர்களிடம் ஒப்படைத்தால் நிதிக் கசிவைத் தடுக்க முடியும்
என்பது தமது கருத்தாகும் என அவர் கூறினார்.

கொள்முதல் நடவடிக்கைகளில் சிறந்த பொருள் எது என்பதை
தீர்மானிக்கும் பொறுப்பை கடல், ஆகாய மற்றும் தரைப்படையிடம்
ஒப்படைத்து விடுவோம். இதன் தொடர்பான அரசாங்கத்தின்
பேச்சுவார்த்தையில் அரசியல்வாதிகள் அல்லது வணிக நோக்கம் கொண்ட
தரப்பினரின் தலையீடு இல்லாதிருப்பதையும் உறுதி செய்வோம் என்றார்
அவர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் முதலீட்டாளர்கள் மத்தியில்
நம்பிக்கையை ஏற்படுத்துவது மற்றும் முதலீடு தொடர்பான விண்ணப்பங்களை விரைந்து அங்கீகரிப்பது ஆகியவை 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முக்கிய கவனம் செலுத்த வேண்டிய அம்சங்களாகும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :