மலிவு விற்பனைக்கு அமோக ஆதரவு- அனைவரும் பயன்பெறும் வகையில் பொருள்களுக்கு அளவு கட்டுப்பாடு

கிள்ளான், ஜன 17- செமந்தா சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெற்ற
மாநில அரசின் மலிவு விற்பனைக்கு அமோக ஆதரவு கிடைத்தது.
இத்திட்டத்தின் வழி மேலும் அதிகமானோர் பயன் பெறும் வகையில்
விற்கப்படும் பொருள்களுக்கு அளவு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்த ஏசான் ராக்யாட் விற்பனைத் திட்டத்தில் கலந்து கொண்ட
அனைவரும் பயன் பெறும் வகையில் இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டதாகச் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக்
கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) தொடர்பு வியூகப் பிரிவு நிர்வாகி நேர் அஸ்ரினா
அப்துல் அஜிஸ் கூறினார்.

அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு பொதுமக்கள் காலை 8.00
மணி முதல் காத்திருந்த காரணத்தால் இந்த விற்பனை
நிர்ணயிக்கப்பட்டதை விட 15 நிமிடங்கள் முன்னதாக ஆரம்பிக்கப்பட்டதாக
அவர் தெரிவித்தார்.

ஒருவருக்கு ஒரு கோழி மற்றும் ஒரு தட்டு முட்டை என விற்பனை
அளவைக் கட்டுப்படுத்தினோம். அதிகமாக விற்பனையாகும் இந்த
பொருள்களை மேலும் பலர் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில்
இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.

விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 250 கோழிகளும் 150 தட்டு
முட்டைகளும் விற்றுத் தீர்ந்தன. விற்பனை அளவைக்
கட்டுப்படுத்தியிராவிடில் பலர் வெறுங்கையோடு திரும்பியிருப்பர் என
அவர் சொன்னார்.

இந்த விற்பனை காலை 10.00 மணிக்குத் தொடங்கிய வேளையில் 11.30
மணிக்கெல்லாம் அனைத்துப் பொருள்களும் விற்று முடிந்து விட்டன என
அவர் தெரிவித்தார்.


Pengarang :