SELANGOR

மலிவு விற்பனை- 50 வெள்ளிக்கும் குறைவான தொகையில் அதிக பொருள்கள் கொள்முதல்- பொதுமக்கள் மகிழ்ச்சி

செலாயாங், ஜன 17- இங்குள்ள குவாங், பண்டார் தாசேக் புத்ரியில் உள்ள
புத்ரி சென்ட்ரல் பார்க்கில் இன்று காலை நடைபெற்ற மாநில அரசின்
ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையில் பங்கேற்கப் பொது மக்கள் காலை
7.00 மணி முதல் வரிசையில் காத்திருந்தனர்.

இந்த விற்பனையின் மூலம் ஐம்பது வெள்ளிக்கும் குறைவான
தொகையில் அதிகமான பொருள்களை வாங்குவதற்கு வாய்ப்பு கிட்டியது
குறித்து இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்த மலிவு விற்பனையில் பங்கேற்பதற்கான வரிசை எண்ணைப்
பெறுவதற்கு தாம் காலை 7.00 மணிக்கே தாம் விற்பனை இடத்திற்கு
வந்ததாக ரோஸ்லி அகமது (வயது 64) என்ற முதியவர் கூறினார்.
எனினும், தமக்கு முன்பாக 100 பேர் வரை காத்திருந்ததைக் கண்டு தாம்
அதிர்ச்சியடைந்ததாக அவர் சொன்னார். காலை 7.00 மணிக்கு வந்த போது
நான்தான் முன்னதாக வருவதாக நினைத்தேன். இங்கு வந்து சேர்ந்த
போதுதான் எனக்கு முன்பாக 100 பேர் வரை காத்திருப்பதை கண்டு
அதிர்ச்சியடைந்தேன் என்றார் அவர்.

மாநில அரசின் இந்த மலிவு விற்பனைக்காக நான் பெரிதும்
காத்திருந்தேன். இத்திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது குறித்து நான்
மகிழ்ச்சியடைந்தேன். ஒரு கோழி, ஒரு தட்டு முட்டை, அரிசி ஒரு
பொட்டலம், ஒரு பாக்கெட் மீன், இறைச்சி ஆகிய பொருள்களை வெறும்
46.00 வெள்ளிக்கு வாங்கினேன் என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஏசான் ராக்யாட் திட்டம் மறுபடியும் அமல்படுத்தப்படுவது குறித்து
தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாக உமி சலாமா இஷாக் (வயது 36)
சொன்னார். இந்த திட்டத்தின் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருள்களை மலிவான
விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பு கிட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

காலை 7.30 மணிக்கு நான் இங்கு வந்தேன். அதற்குள் 300 பேருக்கான
எண்களும் கொடுக்கப்பட்டு விட்டன. இருந்த போதிலும் கோழி, இறைச்சி,
அரிசி போன்ற பொருள்களை என்னால் வாங்க முடிந்தது என அவர்
கூறினார்.


Pengarang :