NATIONAL

மாணவர்களுக்கான உதவி நிதியை மீட்பதில் எஸ்.ஒ.பி. விதிமீறல் நிகழ்ந்துள்ளது- கல்வியமைச்சர்

ஈப்போ, ஜன 17- மாணவர் தொடக்க உதவித் திட்டத்திற்காக
வங்கியிலிருந்து மீட்கப்பட்ட 109,000 வெள்ளி களவு போன விவகாரத்தில்
நிலையான செயலாக்க நடைமுறை (எஸ்.ஒ.பி.) விதிகள்
மீறப்பட்டுள்ளதாகக் கல்வியமைச்சர் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தின் பெரனாங்கில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான
தொடக்க கட்ட விசாரணையில் எஸ்.ஒ.பி. விதிமீறல் நிகழ்ந்துள்ளது
கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் ஃபாட்லினா சீடேக் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் காவல் துறையும் சிலாங்கூர் மாநில கல்வி
இலாகாவும் தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர்
சொன்னார்.

பத்தாயிரம் வெள்ளி வரையிலான தொகையை மீட்கும் போது
தலைமையாசிரியர் அல்லது பள்ளியின் முதல்வர் இரு ஆசிரியர்களை
உடன் அழைத்துச் செல்லலாம் என்றும் அதற்கும் மேற்பட்ட தொகையாக
இருக்கும் பட்சத்தில் போலீசாரின் உதவியை நாட வேண்டும் என்று
கல்வியமைச்சின் விதிமுறை கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் சம்பந்தப்பட்டது பெரிய தொகை என்பதாலும் எஸ்.ஓ.பி. விதிகள்
மீறப்பட்டுள்ளதாலும் பணம் களவு போன விவகாரத்தை நாங்கள்
கடுமையாகக் கருதுகிறோம். பத்தாயிரம் வெள்ளிக்கும் மேற்பட்ட
தொகையாக இருப்பின் உடன் செல்பவர் இருந்தாக வேண்டும். காரணம்
இது பெரிய தொகையாகும் என்றார் அவர்.

இச்சம்பவம் தொடர்பில் மாநிலக் கல்வித் துறை மற்றும் காவல் துறையின்
அறிக்கைக்காகத் தாங்கள் காத்திருப்பதாகவும் அதன் பின்னரே அடுத்தக்
கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்,
காரில் வைக்கப்பட்டிருந்து மாணவர் தொடக்க உதவி நிதியான 109,000
வெள்ளி அடையாளம் தெரியாத தரப்பினரால் கொள்ளையிடப்பட்டச்
சம்பவம் நேற்று சிலாங்கூர் மாநிலத்தின் பெரனாங்கில் நிகழ்ந்தது.


Pengarang :