NATIONAL

வன்கொடுமைக்கு ஆளான சிறுவனின் வாரிசுகளைத் தொடர்பு கொள்ள போலீஸ் முயற்சி

காஜாங், ஜன 17- செராஸ் 9வது மைல், செராஸ் உத்தாமா அடுக்குமாடி
குடியிருப்பு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கைவிடப்பட்ட நிலையில்
சாலையோரம் கண்டு பிடிக்கப்பட்ட மியன்மார் சிறுவனின் வாரிசுகளைத்
தொடர் கொள்ள போலீசார் முயன்று வருகின்றனர்.

அந்த சிறுவனின் பெற்றோரை கண்டுபிடிப்பதற்குப் பல்வேறு
வழிமுறைகளைத் தாங்கள் கையாண்ட போதிலும் எந்த பலனும்
கிட்டவில்லை என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது
ஜைட் ஹசான் கூறினார்.

அச்சிறுவன் கண்டுபிடிக்கபட்ட பகுதியின் சுற்றுவட்டாரத்தில் சோதனை
கொண்டதோடு அச்சிறுவன் பற்றியத் தகவல்களைப் பரப்புவது, வாட்ஸ்ஆப்
புலனம் மூலம் அச்சிறுவனின் புகைப்படத்தை வெளியிடுவது போன்ற
நடவடிக்கைகளைத் தாங்கள் மேற்கொண்டதாக அவர் சொன்னார்.

சீனப்புத்தாண்டை முன்னிட்டு காஜாங் மாவட்ட நிலையிலான சாலை
பாதுகாப்பு இயக்கத்தை காஜாங்-சிரம்பான் சாலையின் காஜாங்
செலாத்தான் டோல் சாவடியில் தொடக்கி வைத்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நான்கு வயதே நிரம்பிய அச்சிறுவனிடம் மொழிப் பெயர்ப்பாளர் மூலம்
பேசுவதற்கு தாங்கள் மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை
என்று அவர் குறிப்பிட்டார்.

அச்சிறுவன் யாரிடமும் பேச விரும்பவில்லை. எனினும், ஒன்று முதல்
பத்து வரையிலான எண்களை மட்டும் மலாய், ஆங்கிலம் மற்றும் சீன
மொழியில் எழுதுகிறான். அதிர்ச்சியிலிருந்து அவன் இன்னும்
மீளாதிருப்பது போல் தோன்றுகிறது என்றார் அவர்.

துன்புறுத்தலுக்கு ஆளானதாக நம்பப்படும் அச்சிறுவன் தற்போது கோல
லங்காட் சமூக நல இலாகாவின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அவர்
தெரிவித்தார்.


Pengarang :