NATIONAL

வாகனக்  கண்ணாடியை  உடைத்து தலைமை ஆசிரியர் ஒருவரின் RM109,000 திருடப்பட்டுள்ளது

கோலாலம்பூர், ஜன. 17: செமஞ்சேயில்  வாகனத்தின் கண்ணாடியை உடைத்து தலைமை ஆசிரியர் ஒருவரின் ஆரம்பப் பள்ளி உதவித் தொகையான RM109,000 திருடப்பட்டுள்ளது.

50 வயதுடைய அந்த ஆசிரியரிடமிருந்து மதியம் 12.17 மணிக்கு அவரது அலுவலகத்திற்கு இந்தச் சம்பவம் பற்றிய புகார் கிடைத்ததாகக் காஜாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஜைத் ஹாசன் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் காலை 10 மணியளவில் கம்போங் பாரு செமஞ்சேயில் உள்ள ஒரு வங்கியில் இருந்து பணத்தை எடுத்துள்ளார் என்பது காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

“பாதிக்கப்பட்டவர் தனது காரின் முன் பயணி இருக்கையில் அப்பணம் உள்ள பையை வைத்துள்ளார். பின் அவர் தனது காரிலிருந்து இறங்கி அருகில் உள்ள ஒரு உணவகத்திற்கு பானம் வாங்க சென்றுள்ளார்,” என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சிறிது நேரம் கழித்து, பாதிக்கப்பட்டவர் காருக்குத் திரும்பியபோது, பின் பக்கப் பயணியின் வலது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு பணம் இருந்த பை திருடப் பட்டிருப்பதைக் கண்டார்.

சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், குற்றவியல் சட்டத்தின் 379 வது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சம்பவம் குறித்து தகவல் தெரிந்த நபர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் முகமட் ஜைட் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :