NATIONAL

மாதந்தோறும் லஞ்சம் – அமைச்சின் இயக்குநரான “டத்தோ“ உள்பட மூவர் கைது

புத்ராஜெயா, ஜன 19- மாதா மாதம் பெரும் தொகையை லஞ்சமாக
பெற்றதாக சந்தேகிக்கப்படும் அமைச்சு பிரிவொன்றின் இயக்குநராக
பணிபுரியும் டத்தோ அந்தஸ்து கொண்ட நபர் உள்பட மூவரை ஊழல்
தடுப்பு ஆணைய (எஸ்.பி.ஆர்.எம்.) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அந்த அமைச்சு இலாகா இயக்குநரோடு திட்ட ஆலோசகர் மற்றும்
கட்டுமான நிறுவனம் ஒன்றின் இயக்குநர் ஆகிய மூவரும் நேற்று காலை
11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை புத்ராஜெயா வட்டாரம் மற்றும்
எஸ்.பி.ஆர்.எம். தலைமையகத்தில் கைது செய்யப்பட்டனர்.

அந்த அமைச்சின் குத்தகையைப் பெறுவதற்காக அம்மூவரும் கட்டுமான
நிறுவனம் ஒன்றிடமிருந்து மாதாந்திர அடிப்படையில் கையூட்டு பெற்றதாக
நம்பப்படுவதாக எஸ்.பி.ஆர்.எம். வட்டாரங்கள் கூறின.

பணக் கோரிக்கையை விரைவாக அங்கீகரிப்பது, பணி மாற்ற உத்தரவை
விரைந்து வழங்குவது, பணி நீட்டிப்புக்கு அனுமதி வழங்குவது போன்ற
காரணங்களுக்காக சம்பந்தப்பட்ட குத்தகையாளர் அம்மூவருக்கும் இந்த
லஞ்சத் தொகையை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த இலாகா இயக்குநர் மாதந்தோறும் லஞ்சத் தொகையைப் பெற்றது
போக, தனது தேவைக்காக ஆடம்பரப் பொருள்களையும் அந்த
குத்தகையாளரிடமிருந்து வாங்கியது தெரியவந்துள்ளது.

அந்த அமைச்சின் இயக்குநர் விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுத்து
வைக்கப்பட்டுள்ள வேளையில் இதர மூவரும் மூன்று நாட்களுக்கத் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :