SELANGOR

சுபாங் ஜெயா, சீபீல்டு தமிழ்ப்பள்ளியில் பொங்கல் விழா

சுபாங் ஜெயா, ஜன 19-  இங்குள்ள சுபாங் ஜெயா தமிழ்ப்பள்ளியில் பொங்கல் விழா 
இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

"எழுச்சி தரும் பொங்கல்" எனும் கருப்பொருளிலான இந்த விழாவை பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாளர் வாரியத்துடன் இணைந்து பள்ளி நிர்வாகத்தினர் 
சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

பள்ளி கரும்பு, மாவிலை, தோரணத்தால் அலங்காரிக்கப்பட்டு ஆரிரியர்கள், 
மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் புடைசூழ  ஆறு 
புதுப் பானைகளில் பொங்கலிடும்  நிகழ்வு மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்த பொங்கல் விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் 
சங்கப் பொறுப்பாளர்கள் பாரம்பரிய உடையில் பங்கேற்றது நிகழ்வை வண்ணமயமாக்கியதோடு கூடுதல் மெருகைத் தரும் வகையிலும் அமைந்தது.

இந்த பொங்கல் விழா இப்பள்ளியில் வருடாந்திர நிகழ்வாக நடத்தப்படுவதாக 
பள்ளியின் தலைமையாசிரியர் கோவிந்தசாமி சுப்பிரமணி கூறினார்.

இம்முறை ஒரு வகுப்புக்கு ஒரு பானை வீதம் ஆறு பானைகளில் பொங்கலிடும் நிகழ்வு நடைபெற்றது. நமது கலாசார விழாக்கள் தொடர்பான புரிதலையும் பாரம்பரியத்தின் 
மகிமையையும் மாணவர்களுக்கு உணர்த்தும் நோக்கில் இந்த அணுகுமுறை 
கடைபிடிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

Pengarang :