SELANGOR

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நெரிசலைத் தவிர்க்க குறுகிய கால வார்டுகள்- சுகாதார அமைச்சு அறிமுகம்

கோலாலம்பூர், ஜன 23- அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளின்
நெரிசலைக் குறைக்க போதுமான இட வசதி உள்ள மருத்துவமனைகளில்
குறுகிய கால வார்டுகளை ஏற்படுத்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டம் சில மருத்துவமனைகளில் தற்போது அமல்படுத்தப்பட்டு
வருவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கூறினார்.

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் குறிப்பாக மஞ்சள் மண்டலத்தில்
நோயாளிகள் அதிகம் நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் விதமாக இந்த
குறுகிய கால வார்டு முறையை அமல் செய்வது குறித்து
பரிசீலிக்கப்படுகிறது அவர் சொன்னார்.

மருத்துவமனைகளில் உள்ள கட்டில்களின் பயன்பாட்டைக்
கண்காணிப்பதற்கு ஏதுவாக நோயாளிகளுக்கான கட்டில் மேலாண்மை
முறை சீரமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நெரிசல்
ஏற்படுவதற்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மனித ஆற்றல்
மற்றும் வசதிகள் பற்றாக்குறை காரணமாக விளங்குகிறது. ஆகவே
பிரச்சனைக் முழுமையான தீர்வு காணப்படுவது அவசியம் என அவர்
குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் மற்றும் சுகாதாரத் துறையின் எதிர்காலம் ஆகியவற்றைக்
கருத்தில் கொண்டு இப்பிரச்னைக்கான குறுகிய கால, மத்திய கால
மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை நாம் அடையாளம் காண வேண்டும்
என்றார் அவர்.

இது தவிர, அவசர சிகிச்சைப் பிரிவுகளில் காணப்படும் நெரிசலைக்
குறைக்கும் முயற்சியில் அரசு துறைகள், மாநில அரசுகள், அரசு சாரா
அமைப்புகள் மற்றும் தனியார் துறையின் ஒத்துழைப்பை நாடுவது
குறித்தும் அமைச்ச பரிசீலித்து வருவதாக அவர் சொன்னார்.


Pengarang :