SELANGOR

சிலாங்கூரில் கோழி உற்பத்தியை அதிகரிக்க பி.கே.பி.எஸ்- சி.பி. குழுமம் ஒப்பந்தம்

ஷா ஆலம், ஜன 25- வரும் 2025 ஆம் ஆண்டுவாக்கில் 1 கோடியே 48
லட்சம் கோழிகளை உற்பத்தி செய்வதற்காக சிலாங்கூர் மாநில விவசாய
மேம்பாட்டுக் கழகம் உலகின் பிரசித்தி பெற்ற உணவுப் பொருள் உற்பத்தி
பெருநிறுவனமான கேரியோன் பொக்ஹெண்ட் குழுமத்துடன் (சி.பி.)
ஒத்துழைப்பை நல்கவுள்ளது.

கோழிப் பண்ணை, கோழிக் குஞ்சுகள் பொறிக்கும் பண்ணை மற்றும்
முட்டை உற்பத்தி பண்னை ஆகியவற்றை உள்ளடக்கிய ஏசான் உணவு
விலை கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம்
மேற்கொள்ளப்படுவதாக பி.கே.பி.எஸ். தலைமை செயல்முறை அதிகாரி
டாக்டர் முகமது கைரில் முகமது ராஸி கூறினார்.

இந்த கோழி வளர்ப்புத் திட்டத்திற்கான இடத்தை அடையாளம் கண்டு
அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணியில் பி.கே.பி.எஸ். ஈடுபடும்
வேளையில் இத்திட்டத்திற்கான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை சி.பி.
குழும ம் வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.

நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகளைக் கொண்ட உலகின்
மிகப்பெரிய உணவு பொருள் உற்பத்தி நிறுவனமான சி.பி.யின் அனுபவம்
மற்றும் ஆற்றலை இந்த பி.ஐ.எச்.இ. திட்டத்திற்கு பி.கே.பி.எஸ்.
முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் என அவர் சொன்னார்.

இந்த திட்டத்தின் அமலாக்கம் மூலம் வெளிநாடுகளிலிருந்து கோழியை
இறக்குமதி செய்வதை குறைக்க முடியும் என்பதோடு மாநிலச்
சந்தையில் கோழி விநியோகம் மற்றும் விலையை நிலைப்படுத்த இயலும்
என்றார் அவர்.

சி.பி. பண்ணைகளிலிருந்து கோழி மற்றும் முட்டையை நேரடியாக
இறக்குமதி செய்வது மற்றும் இரு நிறுவனங்களுக்கும் இடையே திறன்
மற்றும் பயிற்சிகளை பகிர்ந்து கொள்வது போன்ற நடவடிக்கைகளின்
மூலம் கோழி மற்றும் முட்டை பற்றாக்குறைப் பிரச்னைக்கு தற்காலிக
தீர்வு எட்ட முடியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

பிரசித்தி பெற்ற லோட்டஸ் பேரங்காடி நிறுவனத்தின் உரிமையாளருமான
சி.பி. ஏசான் பொருள்களை சந்தைப்படுத்துவதிலும் ஒத்துழைப்பு நல்கும்
என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :