நிலச்சரிவு காரணமாகக் கூலாய்- கோத்தா திங்கி சாலை மூடப்பட்டது

ஜொகூர் பாரு, ஜன 25: கூலாய், ஜாலான் திராம்-உலு தெப்ராவ் சாலையில் இன்று
நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து உலு தெப்ராவ் பெல்டா பகுதி
நோக்கிச் செல்லும் கூலாய்-கோத்தா திங்கி சாலை போக்குவரத்துக்கு
மூடப்பட்டது.
கூலாய் மாவட்ட பொதுப்பணி இலாகா அரச மலேசிய போலீஸ் படை,
பொது தற்காப்பு படை ஆகியவை சம்பவ இடத்தை அணுக்கமாக
கண்காணித்து வருவதோடு மாற்று போக்குவரத்து திட்டத்தையும் வரைந்து
வருகின்றன.
சம்பந்தப்பட்ட பகுதியில் மண் நகர்வு தொடர்ந்து கண்டறியப்பட்டு
வருகிறது. இதனால், கூலாய்-கோத்தா திங்கி சாலை தொடங்கி
எஸ்.டபள்யு.எம். குப்பை கொட்டும் பகுதியிலுள்ள சாலை சந்திப்பு வரை
போக்குவரத்துக்கு மூடப்படுகிறது என மாவட்ட பொதுப்பணி இலாகா
கூறியது.
மாற்று வழிகளைக் காட்டும் சாலை அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே
நிறுவப்பட்டுள்ளதோடு மண் சரிவு தொடர்ந்து நிகழ்வதைத் தடுக்க
அப்பகுதி கான்வஸ் பைகளால் மூடப்பட்டுள்ளது என்று அது தனது
பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
பொது மக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்தி தங்கள் பயணத்தை
மேற்கொள்ளுமாறு அத்துறை அறிவுறுத்தியது.


Pengarang :