SELANGOR

சிலாங்கூர் சாரிங் இலவசச் சுகாதாரப் பரிசோதனை பிப்ரவரி 18 நடைபெறும்

ஷா ஆலாம், ஜன 28: ஜெலஜா சிலாங்கூர் பென்யயாங் (JSP) திட்டத்தோடு இணைந்து சிலாங்கூர் சாரிங் இலவசச் சுகாதாரப் பரிசோதனை அடுத்த பிப்ரவரி 18 அன்று நடைபெறும்.

சுகாதார எஸ்கோ டாக்டர் சிட்டி மரியா மஹ்மூத் கூறுகையில், இந்த முறை பிசியோதெரபி சிகிச்சை, பல் மற்றும் காது பரிசோதனைகள் உட்பட பல நிகழ்வுகள் சேர்க்கப்பட்டன.

“அது தவிர, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த அரசு சாரா நிறுவனத்துடன் (என்ஜிஓ) ஒரு கூட்டாண்மையையும் நாங்கள் நிறுவியுள்ளோம். அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்வர்.

“அதே நேரத்தில், ஜேஎஸ்பி பங்கேற்பாளர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் பயனுள்ள தகவல்களை தெரிவிக்க ஒரு சுகாதாரக் கண்காட்சியையும் நடத்தவுள்ளோம் என்றார்.

கடந்த ஆண்டு மாநில அரசு சிலாங்கூர் சாரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது குடியிருப்பாளர்களுக்கு நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது.

கடந்த மே முதல் செப்டம்பர் வரையிலான இத்திட்டத்தில் குடும்ப மருத்துவம், உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையின் வரலாறு கொண்ட தனிநபர்களை இலக்காகக் கொண்டு RM3.4 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில், 45,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடல்நலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், மேலும் 4,809 நபர்கள் மேல் சிகிச்சையைப் பெற அறிவுறுத்தப்பட்டனர்.

கூடுதலாகச் சிலாங்கூர் சாரிங், இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, கண் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை, பெருங்குடல் மல இரத்த பரிசோதனை மற்றும் புரோஸ்டேட் பரிசோதனை ஆகியவற்றை வழங்குகிறது.


Pengarang :