NATIONAL

பிரதமரின் தலைமை பொருளாதார, நிதி ஆலோசகராக நுருள் இஸா நியமனம்

ஷா ஆலம், ஜன 30: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமை பொருளாதார மற்றும் நிதி ஆலோசகராக தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் நுருள் இஸா அன்வார் தெரிவித்தார்.

இந்த நியமனம் இம்மாதம் 3ஆம் தேதி அமலுக்கு வந்ததாக தி ஸ்டார் நாளேட்டுக்கு வழங்கிய பேட்டியில் முன்னாள் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது வறுமை ஒழிப்பு, தொழில்நுட்ப மற்றும் திறன் கல்வி சார்ந்த விவகாரங்களில் காட்டிய ஈடுபாடு, தேசிய கணக்காய்வு குழு உறுப்பினராக இருந்த போது கிடைத்த அனுபவம் ஆகியவை இந்தப் பணியை செவ்வனே மேற்கொள்வதற்கு துணை புரியும் எனத் தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

கடந்த காலங்களில் ஆற்றில் பணிகள் மூலம் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு பொருளாதாரத்தை நிர்வகிப்பது, பொறுப்புணர்வு மற்றும் கொள்கை வகுத்தல் ஆகிய பணிகளை திறம்பட ஆற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இது தவிர, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள மலேசியர்களின் ஆற்றலை பயன்படுத்திக் கொள்வது மற்றும் மக்களின் பொருளாதார நிலையை சீர் செய்வது ஆகியவை தமது பிரதான இலக்குகளில் ஒன்றாக விளங்குகிறது என்றும் அவர் சொன்னார்.
நாட்டின் நடப்பு பொருளாதாரச் சூழல் தமது இந்த பணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்ற போதிலும் அதனை சிறப்பான முறையில் கையாளத் தாம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :