கொள்ளையில் ஈடுபட்ட பொழுதுபோக்கு மைய ஊழியர்கள் இருவர் இரண்டு மணி நேரத்தில் கைது

கோல திங்கானு, பிப் 4– கெமாமானில் உள்ள பல்பொருள் விற்பனை மையத்தில் ஆயுதம் ஏந்தி கொள்ளையில் ஈடுபட்டதாக நம்பப்படும் பொழுதுபோக்கு மைய ஊழியர்கள் இருவர் சம்பவம் நிகழ்ந்த இரண்டு மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர்.

கெமாமான் மாவட்டத்திலுள்ள வீடு மற்றும் பட்டறை ஒன்றில் நேற்று அதிகாலை 4.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இரு சோதனை நடவடிக்கைகளில் 24 மற்றும் 39 வயதுடைய இவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட்ஹன்யான்ரம்லான் கூறினார்.

அவ்விரு சந்தேகப் பேர்வழிகளும்  போதைப் பித்தர்கள் என்பதும் அவர்களுக்கு எதிராக கற்பழிப்பு மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றப்பதிவுகள் உள்ளதும் தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் சொன்னார்.

நேற்று முன்தினம்விடியற்காலை 1.45  மணியளவில் சுக்காய் நகரிலுள்ள அந்த பல்பொருள் கடையின் முன்பு அதன் உரிமையாளர் தன் சகாவுடன் அமர்ந்திருந்த போது மோட்டார் சைக்கிளில் இரு ஆடவர்கள் அங்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.

கவசத் தொப்பி மற்றும் கையுறை அணிந்திருந்த அவ்விரு சந்தேகப்பேர்ழிகளும் கடை உரிமையாளர் மற்றும் அவரின் சகாவை துப்பாக்கி போன்ற ஆயுதம் மற்றும் கத்தி முனையில் மடக்கி கடையின் கல்லாவில் இருந்த 2,000 வெள்ளியை கொள்ளையிட்டு தப்பினர் என்றார் அவர்.

மேலும் பாதிக்கப் பட்டரிடமிருந்த 4,000 வெள்ளி ரொக்கம், மூன்று கைப்பேசிகள், ஏ.டி.எம்.கார்டு அடங்கிய பேக்கையும் பறித்துக் கொண்டனர் என்று நேற்று இங்குள்ள மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.


Pengarang :