SELANGOR

துருக்கி மக்களுக்குக் கம்பளி ஆடைகளை வழங்கி உதவுவீர்- சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள்

ஷா ஆலம், பிப் 8- தென் துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான குளிர்காலப் பொருள்களைக் குறிப்பாக கம்பளி ஆடைகளை வழங்கி உதவும்படி பொது மக்கள் குறிப்பகாச் சுபாங் ஜெயா தொகுதிவாசிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

துருக்கிக்குச் சுபாங் ஜெயாவின் தொகுதியின் பரிவு உதவித் திட்டத்தின் கீழ் இந்த உதவிப் பொருள்கள் வரவேற்கப்படுவதாகத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸி கூறினார்.

இந்த உதவிப் பொருள்களை யுஎஸ்ஜே 9இல் உள்ள அல்-ஃபாலா பள்ளிவாசல் மற்றும் யுஎஸ்ஜே 1இல் உள்ள அல்-இர்ஷாட் பள்ளிவாசலில் இன்று தொடங்கி வரும் 15ஆம் தேதி வரை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஒப்படைக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

அண்மையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பல்லாயிரம் உயிர்களைப் பறித்துள்ளதோடு சொத்துகளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகக் கம்பளி ஆடைகள் மற்றும் போர்வைகளை வழங்கி உதவுமாறு சுபாங் ஜெயா வட்டார மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

அந்நாட்டு மக்களுக்குத் தற்போது குளிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய நீண்ட கால்சட்டைகள், முழுக்கை சட்டைகள், கம்பளி ஆடைகள், ஜெக்கெட், காலுறை மற்றும் கையுறை போன்ற பொருள்கள் அதிகம் தேவைப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும், மற்ற ஆடைகளைப் போல் அளவு வேறுபாடு பிரச்சனை ஏற்படாது என்பதால் இந்த உதவித் திட்டத்தில் கம்பளி ஆடைகள் மற்றும் போர்வைகளுக்கு அதிக முக்கியத்தும் அளிக்கிறோம் என்றார் அவர்.

வரும் 11 மற்றும் 16ஆம் தேதிகளில் துருக்கி செல்லும் துருக்கிஷ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்த உதவிப் பொருள்களை அனுப்புவதற்கான முயற்சியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார்.


Pengarang :