ANTARABANGSA

துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,894ஆக உயர்ந்துள்ளது

துருக்கி, பிப் 8: தெற்கு துருக்கியில் திங்கட்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,894ஆக உயர்ந்துள்ளதாக துணை அதிபர் ஃபுவாட் ஒக்தே இன்று தெரிவித்தார்.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஒக்தே, கஹ்ரமன்மராஸ் பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,810 என்று கூறினார்.

“ஒவ்வொரு குடிமகனின் இழப்பும் எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்று ஒக்தேயின் அறிக்கையை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் இன்னும் தேடுதல் மற்றும் மீட்பு பணியைத் தொடர்கின்றனர் என்றார் ஒக்தே. மொத்தம் 5,775 கட்டிடங்கள் இடிந்து விழுந்து 8,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

திங்கள்கிழமை, ரிக்டர் அளவில் 7.8 மற்றும் 7.6 எனப் பதிவான இரு நிலநடுக்கங்கள் துருக்கியை உலுக்கின.  இது அடானா, அடியமான், டியார்பாகிர், காஜியான்டெப், ஹதாய், கிலிஸ், மாலத்யா, உஸ்மானியே மற்றும் சன்லியுர்ஃபா உள்ளிட்ட பல பகுதிகளை பாதித்தது.

இந்த நிலநடுக்கத்தால் அண்டை நாடான சிரியாவும் பாதிக்கப்பட்டது.

– பெர்னாமா


Pengarang :