NATIONAL

பிரதமர் அன்வார் நாளை தாய்லாந்து பயணம்

கோலாலம்பூர், பிப் 8- தாய்லாந்துக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொள்ளவுள்ள  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை பேங்காக் புறப்படுகிறார்.

அந்நாட்டிற்கான இந்த முதல் பயணத்தின் போது அவர் தாய்லாந்து பிரதமர் ப்ராயுத் சான் ஓ-சாவுடன் மலேசிய- தாய்லாந்து இரு வழி உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்துவார்.

தாய்லாந்து பிரதமர் ப்ராயுத்தின் சிறப்பு அழைப்பின் பேரில் பிரதமர் இந்த வருகையை மேற்கொள்வதாக விஸ்மா புத்ரா அறிக்கை ஒன்றில் கூறியது. இரு நாட்டுத் தலைவர்களின் இந்த சந்திப்பின் மூலம் மலேசியா மற்றும் தாய்லாந்துக்கிடையே பல்வேறு துறைகளில் இருவழி உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும்.

பொருளாதாரம், எல்லைப் பகுதி மேம்பாடு மற்றும் தரை எல்லைப் பகுதியில் பரஸ்பர மேம்பாடுத் திட்ட அமலாக்கம் ஆகியவை இந்த பேச்சு வார்த்தையில் முக்கிய இடம்
பெறும் என அது தெரிவித்தது.

மேலும் இந்த சந்திப்பின் போது எரிசக்தி மற்றும் இலக்கவியல் பொருளாதாரம் தொடர்பில் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் சடங்கையும் இரு நாட்டுத் தலைவர்களும் பார்வையிடுவர்.

இந்த சந்திப்பின் ஒரு பகுதியாக இரு தலைவர்களும் வட்டார மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்வர். நம்பிக்கை மற்றும் பங்காளித்துவத்தின் அடிப்படையில் உருவான மலேசியா-தாய்லாந்து நட்புறவின் அணுக்கமான இருவழி உறவை பிரதிபலிக்கும் வகையில் பிரதமரின் இந்த பயணம் அமைந்துள்ளது என்று விஸ்மா புத்ரா கூறியது.

-பெர்னாமா


Pengarang :