NATIONAL

தடுப்பூசி கொள்முதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும்

புத்ராஜெயா, பிப் 8- விதிமுறைகளுக்குப் புறம்பான முறையில் கோவிட்-19 தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டது மற்றும் அதற்கான செலவினம் தொடர்பான வெள்ளை அறிக்கை வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்.

அந்த தடுப்பூசிகளைச் சட்டத் துறை தலைவரின் ஒப்புதல் இன்றி அப்போதைய சுகாதார அமைச்சர் கொள்முதல் செய்துள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இந்த வெள்ளை அறிக்கையைச் சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் போது இவ்விவகாரம் தொடர்பான துல்லியமான விபரங்களை வெளியிடுவார் என்று இன்று அமைச்சரவைக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

முறையான விதிமுறைகள் அல்லது நடைமுறையைப் பின்பற்றி இந்த கொள்முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாதக் காரணத்தால் நிதி விரயம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது. சில தடுப்பூசிகளின் எண்ணிக்கை மற்றும் செலவுத் தொகை சந்தேகத்திற்கு இடமான வகையில் உள்ளன என்றார் அவர்.

எனினும், இந்த குளறுபடிக்கு எந்த அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று அன்வார் குறிப்பிடவில்லை. ஆயினும், இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர் யார் என்பது முக்கியமல்ல. ஆனால் இதில் தொடர்புடைய அனைத்து அமைச்சர்களும் முறையான விளக்கத்தையும் பதிலையும் அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர், அமைச்சு நிலையில் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்கான அதிகாரத்தைச் சுகாதார அமைச்சு மற்றும் அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சுக்கு நிதியமைச்சு வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :