NATIONAL

மெனு ரஹ்மா- அரசின் நிதி ஒதுக்கீடு இன்றி தன்னார்வ அடிப்படையில் வணிகர்கள் முன்னெடுக்கும் திட்டம்- அமைச்சர் விளக்கம்

கோலாலம்பூர், பிப் 9- கடந்த மாத இறுதியில் அமல்படுத்தப்பட்ட 5.00 வெள்ளிக்கும் குறைவான விலையில் உணவு வழங்கும் “மெனு ரஹ்மா“ எனும் கருணை உணவுத் திட்டத்திற்கு அரசாங்கம் எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை.

இது வணிகர்களின் சுய விருப்பத்தின் பேரில் மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமாக விளங்குகிறது என்று உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் ஆயோப் கூறினார்.

இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் நாடு முழுவதும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. உதவி தேவைப்படுவோருக்கு குறிப்பாக பி40 தரப்பினருக்கு உதவ வேண்டும் என்ற மத்திய அரசின் விருப்பத்தை ஏற்று வணிகர்கள் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

பல வணிகர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தங்கள் கடைகளில் 5.00 வெள்ளிக்கும் குறைவான விலையில் உணவை வழங்கி வருகின்றனர். எந்தவொரு நிர்பந்தமும் இன்றி தாங்களாகவே முன்வந்து இந்த சமூக நலத் திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற உணர்வு அவர்களுக்கு உள்ளதை இது புலப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

நமது கோட்பாடு தெளிவானது. இந்த திட்டத்திற்கு நாம் ஒரு காசு கூட செலவழிக்கவில்லை என்று இங்குள்ள டத்தோ கிராமாட்டில் மலேசியத் தோம் யாம் சங்கத்தின் ஏற்பாட்டிலான மெனு ரஹ்மா திட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.

இந்த மெனு ரஹ்மா திட்டத்தில் பங்கேற்கும்படி எந்த வணிகர்களையோ, வணிக ஸ்தாபானங்கயோ அல்லது உணவுப் உற்பத்தி நிறுவனங்களையோ அரசாங்கம் ஒருபோதும் நிர்பந்தம் செய்தது கிடையாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. மாறாக, மைடின் முகமது
ஹோல்டிங்ஸ், மலேசிய இந்திய முஸ்லீம் உணவகச் சங்கம் மற்றும்
மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்துடன் இவ்விவகாரம்
தொடர்பில் கலந்துரையாடல் நடத்தினோம் என்றார் அவர்.


Pengarang :