SELANGOR

ஷா ஆலம் தமிழர் சங்க ஏற்பாட்டில் மூத்தக் குடிமக்களுக்குச் சத்துணவு வழங்கும் நிகழ்வு

ஷா ஆலம், பிப் 9- ஷா ஆலம் தமிழர் சங்க ஏற்பாட்டில் மூத்தக் குடிமக்களுக்கு சத்துணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் செக்சன் 16, தாமான் ரிம்பா ஜெயா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சமூக மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாஜி அஸ்லி யூசுப் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய மற்றும் மலாய் சமூகத்தைச் சேர்ந்த 60 மூத்தக் குடிமக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து உதவிப் பொருள்களைப் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அஸ்லி, இவ்வட்டாரத்திலுள்ள மூத்தக் குடிமக்களுக்கு உதவும் நோக்கில் இந்த சத்துணவுப் பொருள் விநியோகத் திட்டத்தை மேற்கொண்டு ஷா ஆலம் தமிழர் சங்கத்தை தாம் பாராட்டுவதாக கூறினார்.

மாநில அரசின் ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையை இந்த குடியிருப்பு பகுதியில் நடத்துவதற்குத் தாம் ஏற்பாடு செய்வதாகவும் அவர் வாக்குறுதியளித்தார்.

சுமார் 5,000 வெள்ளி செலவில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு வீ.கணபதிராவ் தலைமையிலான சமூக நலத் துறை ஆதரவு வழங்கியிருந்ததாக ஷா ஆல தமிழர் சங்கத்தின் தலைவர் சீரியநாதன் கூறினார்.

இது போன்ற நிகழ்வை ஷா ஆலம் தமிழர் சங்கம் கடந்த மாதம் தாமான் ஸ்ரீ மூடா, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :