NATIONAL

காணாமல் போனதாக நம்பப்படும் தனியார் உயர்கல்வி கூட மாணவனைத் தேடும் பணி நிறுத்தப்பட்டது

மெர்சிங், பிப்.9: இங்குள்ள புலாவ் மாவரில் தனியாக மலை ஏற சென்று காணாமல் போனதாகக் கூறப்படும் தனியார் உயர்கல்வி கூட மாணவனைத் தேடும் பணி (எஸ்ஏஆர்) நேற்று இரவு 7 மணியுடன் நிறுத்தப்பட்டது.

ஐந்தாவது நாளாக தேடுதல் வேட்டையில் எந்த துப்பும் கிடைக்காததால் நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக மெர்சிங் மாவட்டக் காவல்துறை தலைவர் சூப்பரின்டெண்டன்ட்  அப்துல் ரசாக் அப்துல்லா சானி தெரிவித்தார்.

“இதுவரை, நிலம் மற்றும் நீர் பகுதிகளில் பாதிக்கப்பட்டவ ர்களைத் தேட உதவும் எந்த தடயங்களும் அறிகுறிகளும் கிடைக்கவில்லை.

“எவ்வாறாயினும், ஏதேனும் பொருத்தமான தகவல்கள் இருந்தால், மீண்டும் தேடுதல் நடத்தப்படும்,” என்று அவர் கூறினார்.

மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த நடவடிக்கையும் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.

இருபது வயதான முஹாமட் அக்மல் ஹக்கிமி இஷாக் பிப்ரவரி 1 முதல் வீடு திரும்பாததால், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை குளுவாங் காவல் நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்தார்.

முஹாமட் அக்மல் ஹக்கீமுக்கு சொந்தமானது என நம்பப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று நல்ல நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் புலாவ் மாவார் அருகே ஒரு பகுதியில் கண்டறியப்பட்டது.

– பெர்னாமா


Pengarang :