NATIONAL

மலேசியாவின் இரண்டாவது மீட்புக் குழு துருக்கிக்குப் பயணம்

இஸ்தான்புல், பிப் 9: துருக்கிக்கு நேற்று அனுப்பப்பட்ட இரண்டாவது மலேசியச் சிறப்பு தேடல் மற்றும் மீட்புக் குழு (ஸ்மார்ட்), இன்று காலை 11 மணிக்கு (உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு) இஸ்தான்புல் விமான நிலையத்தைப் பாதுகாப்பாகச் சென்றடைந்தது.

தேசியப் பேரிடர் மேலாண்மை அமைப்பின் (NADMA) மேற்பார்வையில் இரண்டாவது மீட்புக் குழுவின் வருகையைத் துருக்கியில் உள்ள மலேசியத் தூதர் சசாலி முஸ்தபா கமால் வரவேற்றார்.

ஸ்மாட் மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் (JBPM) சேர்ந்த 72 உறுப்பினர்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிக்காகத் நேற்று நள்ளிரவு துருக்கிக்குப் புறப்பட்டனர்

மலேசியாவின் தேசியச் செய்தி நிறுவனத்தின் (பெர்னாமா) இரண்டு அதிகாரிகள் மற்றும் ரேடியோ டெலிவிஷன் மலேசியாவின் (ஆர்டிஎம்) கேமராமேன் ஆகியோர் அக்குழுவில் இணைந்துள்ளனர்.

மேலும், அக்குழு இஸ்தான்புல்லில் இருந்து 1,136 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காசியான்டெப் என்ற ஊருக்கு இரண்டாவது விமானத்தில் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை தெற்கு துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின. நிலநடுக்கத்தின் தாக்கம் சைப்ரஸ் மற்றும் லெபனானிலும் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7,108 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 40,910 ஆக உள்ளது.

– பெர்னாமா


Pengarang :