SELANGOR

நிபுணத்துவ மருத்துவ சேவையைப் பெறத் தஞ்சோங் காராங் மக்களுக்கு வாய்ப்பு- சுல்தான் மகிழ்ச்சி

கோல சிலாங்கூர், பிப் 9- தஞ்சோங் காராங் மருத்துவமனையை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் இன்று  திறந்து வைத்தார். இந்த மருத்துவமனை கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.

சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் அவரின் துணைவியார் ராஜா பெர்மைசூரி நோராஷிகின் தம்பதியர் காலை 11.30 மணியளவில் மருத்துவமனை வந்தனர். பின்னர் அவர்கள் மருத்துவமனை வளாகத்தைப் பார்வையிட்டனர்.

தஞ்சோங் காராங் வட்டார மக்கள் சிறந்த மருத்துவச் சேவையைப் பெறுவதற்கு ஏதுவாக இந்த மருத்துவமனை கட்டப்பட்டது குறித்து சுல்தான் தமது உரையில் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்த மருத்துவமனை நிபுணத்துவ மருத்துவ வசதியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகள் மருத்துவ நிபுணர்களின் சேவையைப் பெறுவதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. முன்பு இச்சேவையைப் பெற அவர்கள் சுங்கை பூலோ மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மருத்துவமனை திறக்கப்பட்டதன் மூலம் கோல சிலாங்கூர் மாவட்ட மக்கள் சிறந்த சுகாதாரச் சேவையைப் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது என்றும் அவர் சொன்னார்.

இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வசதி ஏற்படுத்தப்பட்டதன் மூலம் கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி உடனடியாகச் சிகிச்சைப் பெறும் சூழல் உருவாகியுள்ளது என்றார் அவர்.

இந்த நிகழ்வில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம், சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த மருத்துவமனையை நிர்மாணிப்பதற்கு 10வது மலேசியத் திட்டத்தின் கீழ் கடந்த 2013ஆம்  ஆண்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது. சுமார் 16.1 ஹெக்டர் நிலப்பரப்பில் 26 கோடியே 90 லட்சம் வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மருத்துவமனை கடந்தாண்டு இறுதி தொடங்கி செயல்பட்டு வருகிறது.


Pengarang :