NATIONAL

கெந்திங் ஹைலண்ட்ஸ் சுற்றுலா வேன் விபத்து- விசாரணை நடத்த அமைச்சர் உத்தரவு

புத்ரா ஜெயா, பிப் 9- கெந்திங் சாலையின் 4.8வது கிலோ மீட்டரில் நேற்று நிகழ்ந்த மரண விபத்தில் சம்பந்தப்பட்ட சுற்றுலா வேன் நிறுவனத்திற்கு எதிராக விசாரணை நடத்தும்படி தரை பொது போக்குவரத்து நிறுவனம்  மற்றும் சாலை போக்குவரத்து இலாகாவுக்குப் போக்குவரத்து அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த விபத்துக்கான  காரணத்தைக் கண்டறிவதற்காக ஆய்வினை மேற்கொள்ளும்படி மிரோஸ் எனப்படும் மலேசியச் சாலை பாதுகாப்பு ஆராய்ச்சி கழகத்தையும் அந்தோணி லோக் பணித்துள்ளார்.

விபத்து நிகழ்ந்த பகுதியில் சாலையின் அமைப்பு முறை குறித்து மிரோஸ் விசாரணை மேற்கொள்ளும் என்றும் அதன் முடிவுகள் பொதுப்பணி அமைச்சிடம் ஒப்படைக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

விபத்து நிகழ்ந்த இடத்திலுள்ள சாலையின் வடிவமைப்பு மற்றும் வளைவு வாகன மோட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதா என்பதை கண்டறிவதை இந்த விசாரணை இலக்காக கொண்டிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

சுற்றுப்பயணிகளை ஏற்றிருந்த அந்த வேன் சம்பந்தப்பட்ட இடத்திலுள்ள கூர்மையான வளைவை அடைந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதால் அங்குள்ள சாலை அமைப்பை ஆராய வேண்டியுள்ளது என்றார் அவர்.

சுற்றுப்பயணிகளை ஏற்றியிருந்த வேன் ஒன்று நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் கெந்திங் மலையிலிருந்து பினாங்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் உட்பட அறுவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் மேலும் ஒருவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சையின் போது மரணமடைந்தார்.


Pengarang :