NATIONAL

ஆயுதமேந்தி கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் ஐந்து ஆடவர்கள் கைது

கோலாலம்பூர், பிப் 13- உலு கிளாங், தாமான் கிராமாட்டில் உள்ள 24 நேரப் பல்பொருள் விற்பனை மையத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆயுதமேந்தி கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் ஐந்து ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

வங்சா மாஜூ மற்றும் புடு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில் 20 முதல் 30 வயது வரையிலான அந்த ஐந்து உள்நாட்டு ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபாரூக் ஏஷாக் கூறினார்.

அந்த கும்பலைச் சேர்ந்த இருவர் அக்கடையினுள் நுழைந்து அதன் பணியாளரைக் கத்தி முனையில் மடக்கி டச் அண்ட் கோ செயலியில் உள்ள தொகை மதிப்பை அதிகரிக்கும்படி கூறியதோடு கல்லாவில் இருந்த பணத்தையும் கொள்ளையிட்ட வேளையில் மேலும் மூவர் கடையின் வெளியே காத்திருந்துள்ளனர் என்பது தொடக்கக் கட்ட விசாரணையில்
தெரிய வந்துள்ளது என்று அவர் சொன்னார்.

அதோடு மட்டுமின்றி அக்கும்பல், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிகிரெட்டுகள் மற்றும் இதர பொருள்களையும் கொள்ளையிட்டுள்ளதாகக் கூறிய அவர், இதனால் அந்த வணிக மையத்திற்கு ஏற்பட்ட இழப்பு சுமார் 1,500 வெள்ளியாகும் என்றார்.

இச்சம்பவம் தொடர்பான சோதனையில் புரோடுவா கெலிசா கார், சில கைப்பேசிகள், இரு ஜோடி கைவிலங்குகள் மற்றும் அதன் சாவிகள், கருப்பு உறையுடன் கூடிய கத்தி, 300 வெள்ளி ரொக்கம் உள்ளிட்ட பொருள்கள் விசாரணைக்காகக் கைப்பற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :