NATIONAL

15வது நாடாளுமன்றத்தின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கூட்டத் தொடரை மாமன்னர் தொடக்கி வைத்தார்

கோலாலம்பூர், பிப் 13- பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கூட்டத் தொடரை மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா இன்று அதிகாரப்பூர்வமாகத்  தொடக்கி வைத்தார்.

இந்த நிகழவில் ராஜா பெர்மைசூரி துஙகு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியாவும் கலந்து கொண்டார். இன்று காலை 10.00 மணியளவில் நாடாளுமன்றக் கட்டிடம் வந்த மாமன்னர் தம்பதியரைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும்
அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் ஆகியோர் வரவேற்றனர்.

இரு துணைப் பிரதமர்களான டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி, டத்தோஸ்ரீ ஃபாடிலா யூசுப், மக்களவை சபாநாயகர் டத்தோ ஜோஹாரி அப்துல் மற்றும் மேலவை சபாநாயகர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் ஆகியோரும் உடனிருந்தனர்.

பின்னர் பிரதான மேடைக்கு சென்று மாமன்னர் தம்பதியர் அரச மலாய் இராணுவப் படைப்பிரிவின் முதலாவது பட்டாளம் வழங்கிய மரியாதை அணிவகுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

அடுத்த நிகழ்வாக தேசியக் கொடி ஏற்றப்பட்டு 21 மரியாதை குண்டுகள் முழங்க தேசியக் கீதம் இசைக்கப்பட்டது. தேநீர் இடைவேளைக்குப் பிறகு அரச உரை நிகழ்த்துவதற்காக மாமன்னர் அவைக்குச் சென்றார்.

இன்று தொடங்கும் இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் வரும் மார்ச் மாதம் 30ஆம் தேதி வரை நடைபெறும். மேலவைக் கூட்டம் மார்ச் 21 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறும்.


Pengarang :