NATIONAL

போலீஸ் சார்ஜன் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானச் சம்பவம் மீது வெளிப்படையான விசாரணை- ஐ.ஜி.பி. உறுதி

கோலாலம்பூர், பிப் 24- சார்ஜன் அந்தஸ்தில் உள்ள போலீஸ்காரர் ஒருவர் மூன்று துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பினாங்கு,  பாயான் லெபாஸ் காவல் நிலையத்தின் பின் பகுதியில்  இறந்து கிடந்தது தொடர்பில் அரச மலேசியப் போலீஸ் படை  
வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளும். 

சொந்த உறுப்பினர்கள் உட்பட எந்தத் தரப்பினரின் தவறுகளை மூடி மறைக்கவோ 
அல்லது பாதுகாக்கவோ அரச மலேசியப் போலீஸ் படை முயலாது என்று தேசியப் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் மேல் விசாரணை மேற்கொள்வதற்கு முன்னர் மருத்துவக் குழுவின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகத் தாங்கள் காத்திருப்பதாக அவர் சொன்னார்.

இன்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் மற்றும் சிலாங்கூர் பெர்கெப் தலைவரின் பதவியேற்பு மற்றும் பதவி ஒப்படைப்பு நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் மீதான விசாரணை முடியும் வரை இது குறித்து எந்தவித 
ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களைத் தாம் கேட்டுக் 
கொள்வதாக அவர் கூறினார்.

இம்மாதம் 19ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் கழுத்து, மார்பு மற்றும் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன்  51 வயதுடைய அந்த சார்ஜன் இறந்து கிடந்தார். அவரின் உடலின் அருகே துப்பாக்கி ஒன்றும் காணப்பட்டது

Pengarang :