NATIONAL

பத்தாங் காலி நிலச்சரிவு அறிக்கையை வெளியிட மாநில அரசு தயார்- மந்திரி புசார் கூறுகிறார்

அம்பாங், பிப் 27- கெந்திங்-பத்தாங் காலி சாலையில் உள்ள ஃபாதர்‘ஸ் ஆர்கானிக் ஃபார்ம் பொழுது போக்கு முகாம் பகுதியில் கடந்தாண்டு இறுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளிடமிருந்து விண்ணப்பம் வரும் பட்சத்தில் அந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை அவர்களுக்கு வெளியிட சிலாங்கூர் மாநில
அரசு தயாராக உள்ளது.

இந்த அறிக்கையைக் கனிமள மற்றும் புவிஅறிவியல் துறை தயாரித்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இந்த பேரிடருக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக இந்த அறிக்கையைத் தாம் விரைவில் மாநில ஆட்சிக்குழுவில் சமர்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இங்குள்ள செம்பாக்கா இலகு ரயில் நிலையத்தில் ஐ.பி.ஆர். எனப்படும் மக்கள் வருமானத் திட்டத்தைத் தொடக்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி இந்த நிகழ்வைத் தொடக்கி வைத்தார். நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருணும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி நிகழ்ந்த அந்த பேரிடர் தொடர்பான அறிக்கையை அரசாங்கம் விரைவாக வெளியிட வேண்டும் என அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்தது தொடர்பில் அமிருடின் இவ்வாறு தெரிவித்தார்.

அந்த நிலச்சரிவு சம்பவத்தில் 13 சிறார்கள் உள்பட 31 பேர் உயிரிழந்ததோடு மேலும் 30 பேர் காயங்களுக்குள்ளாகினர்.


Pengarang :