NATIONAL

தொழில்கல்வி, அரசு மருத்துவமனைகளில் நெரிசல் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி இன்று மக்களவையில் விவாதம்

கோலாலம்பூர், பிப் 28- தொழில்நுட்ப மற்றும் தொழில்கல்வி பயிற்சித் திட்டத்தில் (திவேட்) இளைஞர்களின் பங்கேற்பு, அரசாங்க நிர்வாக முறையில் சீர்திருத்தம், அரசு மருத்துவமனைகளில் நிலவும் நெரிசல் உள்ளிட்ட விவகாரங்கள் இன்றைய மக்களவைக் கூட்டத்தில் முக்கிய இடத்தைப் பெறும்.

இன்று காலை 10.00 மணிக்கு அவை தொடங்கியதும் முதல் அங்கமாக இடம் பெறும் அமைச்சர்கள் கேள்வி நேரத்தின் போது இந்த கேள்விகளுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதிலளிப்பார் என்று நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திவேட் திட்டத்தின் ஆக்கத்தன்மையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பெந்தோங் தொகுதி ஹராப்பான் வேட்பாளர் யோங் சைபுரா ஓத்மான் கேள்வியெழுப்புவார்.

நாட்டின் நிர்வாக அமைப்பு முறையை சீர்திருத்துவதற்கு ஏதுவாக விரிவான அளவிலான ஆலோசனை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்று இண்ட்ரா மக்கோத்தா தொகுதி பெரிக்கத்தான் உறுப்பினர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா வினவுவார்.

தற்போது அரசாங்க மருத்துவமனைகளில் நிலவும் நெரிசலைக் கருத்தில் கொண்டு சுகாதாரச் சேவையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் கொண்டுள்ளதா என்று சிபு தொகுதி ஹராப்பான் வேட்பாளர் ஆஸ்கார் லிங் சாய் இயோ கேள்வியெழுப்புவார்.


Pengarang :